Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சிதம்பரம் காவலர்களின் குழந்தைகள் பிச்சாவரத்தில் உற்சாக படகு சவாரி

சிதம்பரம்: சிதம்பரம் காவலர் குடியிருப்பில் வசிக்கும் 80 குழந்தைகளை பிச்சாவரத்திற்கு அழைத்துச்ெசன்ற இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், குழந்தைகளுடன் படகு சவாரி செய்து சுரபுன்னை காடுகளின் பயன்களை விளக்கினார். இதனால் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் உள்ள காவலர் குடியிருப்பில் ஏராளமான போலீசார் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இங்குள்ள போலீசார் பணிச்சுமை காரணமாக தங்கள் குழந்தைகளை பூங்கா, கடற்கரை, ஷாப்பிங் என அழைத்துச்செல்வது குறைந்து வருகிறது.

இதனால் குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்குவதற்காக காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர்களின் குழந்தைகள் சுமார் 80 பேரை அண்ணாமலை நகர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் நேற்று, பிச்சாவரம் அழைத்துச் சென்றார். பிச்சாவரத்தில் இயற்கையின் அதிசயமாக விளங்கும் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள சுரபுன்னை காடுகள், அவை வளரும் விதம், கடல் அரிப்பை எவ்வாறு இந்த சுரபுன்னை காடுகள் தடுக்கிறது? மற்றும் அதன் முக்கியத்துவம், பயன்கள் குறித்து வனத்துறை காவலர் முத்துக்குமார் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறினார்.

பின்னர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், குழந்தைகளை படகு சவாரிக்கு அழைத்துச் சென்றார். அப்போது பிச்சாவரம் சதுப்பு நில காடுகளின் இயற்கை அழகை ரசித்தவாறே குழந்தைகள் படகு சவாரி செய்தனர். படகு சவாரி முடிந்ததும் மீண்டும் பேருந்து மூலம் குழந்தைகளை அழைத்து வந்து காவலர் குடியிருப்பில் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் விட்டார். அவரது இந்த செயலால் காவலர்களின் குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்ததோடு, பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.