மாதவரம் ரெட்டேரில் இருந்து வெளியேறும் உபரிநீர் செல்ல நிரந்தர மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
புழல்: மாதவரம் ரெட்டேரி ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் செல்ல நிரந்த மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும், என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பு தெரிவிக்கின்றனர். புழல் அடுத்து எம்ஜிஆர் நகர் பகுதியில் மாதவரம் ரெட்டேரி அமைந்துள்ளது. தற்போது, இந்த ஏரியை, சுற்றுலா தலமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, பணிகளும் விரைந்து நடைபெற்று வருகிறது. இந்த, ஏரியின் மொத்த கொள்ளளவு 45 மில்லியன் கன அடி. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்ததால், ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து, அருகில் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள ஒரே ஒரு கலங்களில் தண்ணீர் பெருகெடுத்து ஓடியது. மேலும், தண்ணீர் அதிகரித்ததால் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், புழல் அருகே உள்ள அறிஞர் அண்ணா நகர், ராகவேந்திரா அவென்யூ, லிங்கம் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் தெருக்களில் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். இதற்கு, இப்பகுதியில் நிரந்தர கால்வாய் இல்லாததே முக்கிய காரணமாக உள்ளது.
இப்பகுதியில், உயர் மின்னழுத்த கோபுரத்தின் கீழே பயன்படுத்தாத இப்பாதை சுமார் 200 அடி அகலத்திலும் 300 அடி நீளத்திலும் அமைந்துள்ளது. அந்த, பகுதி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உத்தரவுப்படி பயன்பாட்டுக்கு இல்லாத நிலமாகவே உள்ளது. குறிப்பாக, மழை காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, இந்த பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகவே உள்ளது. இதனால், வீடுகள் கட்டி குடியிருக்கும் மக்களை அகற்றாமல் இருக்க செங்குன்றம் நீர்வளத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது, சில தினங்களில் மழையால் பகுதி மக்கள் பாதிப்பு அடைந்து வரும் நிலையில், மாதவரம் மண்டலம் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய்களை இரண்டு இடங்களில் உடைத்து, ரெட்டேரியில் இருந்து செல்லும் உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
தற்போது, அந்த வழியாக கால்வாய் அமைத்தால் உபரிநீர் எளிதாக செல்லும். எனவே, இனிவரும் மழை காலங்களில் ரெட்டேரி முழு கொள்ளளவு நிரம்பி கலங்கள் வழியாகவும், மதகுகள் வழியாகவும் வெளியேறும் தண்ணீர் புதிதாக கால்வாயில் செல்ல வழிவகை செய்ய வேண்டும். இதனால், அறிஞர் அண்ணா நகர், ராகவேந்திரா அவென்யூ, லிங்கம் தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள், பாதிப்படைவது தவிர்க்கப்படும் என தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து அறிஞர் அண்ணாநகர், ராகவேந்திரா அவென்யூ, லிங்கம் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கூறுகையில், ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையின்போது எம்ஜிஆர் நகர் அருகிலுள்ள மாதவரம் ரெட்டேரியில் தண்ணீர் நிரம்பி, நாங்கள் வசிக்கும் பகுதியில் வெள்ளமாக பெருகெடுத்து ஓடுகிறது. இதனால், கொசு தொல்லை மட்டுமின்றி பாம்புகள், விஷ பூச்சிகள் மற்றும் தண்ணீரில் கழிவுநீர் கலந்து பல்வேறு தொற்று நோய் ஏற்படும் அவல நிலை உள்ளது.
போதிய சுகாதார வசதிகள் இருந்தாலும், எங்களுக்கு ஆண்டுதோறும், இது ஒரு பெரும் பிரச்னையாகவே உள்ளது. இதனை நிரந்தரமாக தீர்த்து வைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். தமிழக அரசு அதற்கான முடிவு எடுத்தாலும், சம்பந்தப்பட்ட செங்குன்றம் நீர்வளத்துறை அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக காலம் கடத்தி வருகின்றனர். குறிப்பாக, புழல் அடுத்த எம்ஜிஆர் நகர் அருகே அமைந்துள்ள கரையின் மதகு மற்றும் கலங்கள் பகுதிகளை மாற்றி, சுமார் 300 மீட்டர் தூரம் கரை அருகே புதிதாக மதகுகளை அமைக்க வேண்டும். ஏரிக்கரையின் எதிரே செல்லும் உயர் மின்னழுத்த கோபுரத்துக்கு கீழே அமைந்துள்ள நிலம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உத்தரவுப்படி, பயன்பாட்டுக்கு இல்லாமல் உள்ளது. எனவே, அந்த வழியாக மழைநீர் கால்வாய் அமைத்தால், தமிழக அரசுக்கு செலவும் குறையும்.
மேலும், அறிஞர் அண்ணா நகர், ராகவேந்திரா அவன்யூ லிங்கம் தெரு ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக வசிக்கும் எங்களது வீடுகளை அகற்ற வேண்டிய கட்டாயம் இருக்காது. எனவே, ரெட்டேரியின் உபரிநீரை வெளியேற்ற, உரிய மழைநீர் கால்வாய்களை உயர் மின்னழுத்த கோபுரத்தின் கீழே உள்ள காலி நிலத்தின் வழியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
வெள்ளக்காடாக மாறும் மாதவரம் பகுதி
புழல் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் மாதவரம் ரெட்டேரியில், ஆண்டுதோறும் வடக்கிழக்கு பருவமழை காலங்களில் தண்ணீர் நிரம்பினால், வடபெரும்பாக்கம், மாதவரம் நெடுஞ்சாலையில், செங்குன்றம், மாதவரம் செல்லும் திசையில் தண்ணீர் வெள்ளமாக ஓடி, குளம்போல் தேங்கி விடுகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கடைகளில் தண்ணீர் புகுந்து அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும், மூலக்கடை, பெரம்பூர், சென்னை பாரிமுனை ஆகிய பகுதிகளுக்கு அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகின்றனர்.
மேலும், மழைநீரால் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிடுவதால், மெகா பள்ளங்கள் உருவாகி, அதில் விழுந்து பலர் காயமடைகின்றனர். இதனை தடுத்து நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெடுஞ்சாலை துறை, மாநகராட்சி உள்பட பல்வேறு அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தர மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
சாலை வசதி
மதுரவாயலில் இருந்து புழல் சைக்கிள் ஷாப், சென்னை - கொல்கத்தா சாலை இணைக்கும் வரை உள்ள சாலையில் மேம்பாலம் அருகே முடிகிறது. இங்கிருந்து செல்லும் வாகனங்கள் மாதவரம் ரவுண்டானா வழியாக செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சைக்கிள் ஷாப் மேம்பாலத்தில் இருந்து புழல் அடுத்த ரெட்டேரி கரையிலிருந்து உயர் மின்னழுத்தம் செல்லும் பாதை பயன்பாட்டுக்கு இல்லாமல், அதன் நடுவிலே புதிதாக சுமார் 100 மீட்டர் சாலை அமைத்து மாதவரம் மஞ்சம்பாக்கம் 200 அடி சாலையில் இணைத்தால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் விரைந்து செல்லும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


