காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை : இயக்குனரகம் எச்சரிக்கை
சென்னை : காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பரில் காலாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த கல்வி ஆண்டுக்கான காலாண்டு தேர்வு கடந்த செப். 10-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்வுகள் இன்றுடன் முடிவடைகின்றன. சில வகுப்புகளுக்கான தேர்வுகள் நேற்றே முடிந்துவிட்டன. இதையடுத்து, மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நாளை (செப்.27) முதல் அக்.5-ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையில்தான் ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி ஆகியவை கொண்டாடப்படுகின்றன.
இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் அக். 6-ம் தேதி திறக்கப்பட உள்ளன. இதற்கிடையே, காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் எதிரொலியாக காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விடுமுறை நாளில் சிறப்பு வகுப்புகளை நடத்த நீதிமன்றம் தடை விதித்ததை சுட்டிக்காட்டி தனியார் பள்ளிகள் இயக்குனரகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், விதிமுறைகளை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.