மாஜி கணவர் இறந்த மூன்றே நாட்களில் பிரபல நடிகை ஜோக் புரூய்ஸ் மரணம்: நெதர்லாந்து திரையுலகில் பெரும் அதிர்ச்சி
ஆம்ஸ்டர்டாம்: முன்னாள் கணவர் காலமான மூன்று நாட்களில், புகழ்பெற்ற டச்சு நடிகையும், பாடகியுமான ஜோக் புரூய்ஸ் உடல்நலக்குறைவால் காலமானார். நெதர்லாந்து நாட்டின் புகழ்பெற்ற நடிகையும், பாடகியுமான ஜோக் புரூய்ஸ் (73), ‘ராட்டர்டாமின் முதல் பெண்மணி’ என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். கிட்டத்தட்ட 60 ஆண்டாக மேலாக சினிமா துறையில் கோலோச்சிய இவர், எண்ணற்ற திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் இசை ஆல்பங்களில் பணியாற்றியுள்ளார்.
இவர், சக நடிகரான ஜெரார்டு காக்சை 1977ம் ஆண்டு திருமணம் செய்து 1987ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இருப்பினும், இருவரும் விவாகரத்துக்குப் பின்னரும் நெருங்கிய நண்பர்களாகத் தொடர்ந்தனர். தொழில்ரீதியாகவும் இணைந்து பணியாற்றிய அவர்கள், இரண்டு டச்சு தொலைக்காட்சி தொடர்களில் கணவன் மனைவியாக நடித்தனர்.
இந்நிலையில், பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜோக் புரூய்ஸ், கடந்த 2022ம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார். 16ம் தேதி(நேற்று) ஜோக் புரூய்ஸ் காலமானார். இவரது முன்னாள் கணவர் ஜெரார்டு காக்ஸ் கடந்த 13ம் தேதி காலமான நிலையில், அவர் இறந்த மூன்றே நாட்களில் ஜோக் புரூய்ஸும் உயிரிழந்துள்ளார். பார்கின்சன் நோய் தொடர்பான உடல்நலப் பாதிப்புகளால் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜெரார்டு காக்ஸ் அளித்த பேட்டி ஒன்றில், ஜோக் புரூய்ஸின் உடல்நிலை வேகமாக மோசமடைந்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். திருமணமாகி விவாகாரத்து பெற்ற பின்னரும் நெருங்கிய நண்பர்களாக இருந்த இருவரும் அடுத்தடுத்து மூன்று நாட்களில் உயிரிழந்த சம்பவம், நெதர்லாந்து திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.