புதுடெல்லி:காங்கிரஸ் கட்சி எப்போதும் எதிரிகளின் பக்கமே நிற்கிறது என பாஜ கடுமையாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “ஒருகாலத்தில் இந்தியாவின் மிகவும் நம்பகமான நட்பு நாடாக இருந்த ரஷ்யா, தற்போது இந்தியாவின் வேண்டுகோளை புறக்கணித்து பாகிஸ்தானின் ஜேஎப்-17 ரக போர் விமானங்களுக்கு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் கொண்ட ஆர்டி-93எம்ஏ இன்ஜின்கள் வழங்குவதை தொடர முடிவு செய்துள்ளது.
இது பிரதமர் மோடியின் தனிப்பட்ட ராஜதந்திரத்துக்கு கிடைத்த மற்றொரு பெரிய தோல்வி” என காட்டமாக தெரிவித்திருந்தார். ஜெய்ராம் ரமேஷின் இந்த குற்றசாட்டை பாஜ மறுத்துள்ளது. இதுகுறித்து பாஜ தகவல் தொழில்நுட்பத் துறைத்தலைவர் அமித் மாளவியா தன் எக்ஸ் பதிவில், “பாகிஸ்தான் சார்பு பிரசாரத்துக்கு பெயர்போன ஒரு சிறிய இணையதளத்தை மேற்கோள்காட்டி செய்தித்தாளில் வௌியான செய்திகளை ஜெய்ராம் ரமேஷ் நம்பி உள்ளார்.
அவரது கூற்றுக்கு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை. நம்பகமான போதிய ஆதாரம் இல்லை. காங்கிரசின் தகவல் தொடர்பு தலைவர், மீண்டும் இந்தியாவுடன் நிற்காமல் எதிரியின் பக்கம் சாய்ந்து இருப்பதை தேர்வு செய்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.