*குளத்திற்கு தண்ணீர் திறந்து விட விவசாயிகள் வலியுறுத்தல்
கடையம் : கடையம் அருகே கடனா அணை மூலம் சுமார் 10,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் கருத்தப்பிள்ளையூரில் உள்ள மஞ்சலோடை குளம், கடனா அணையில் இருந்து நீர் வசதி பெறுகிறது. இந்த குளத்தின் மூலம் சுமார் 60 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது கார் பருவ சாகுபடியை முன்னிட்டு இந்த பகுதியில் விவசாயிகள் நெல் பயிரிட்டு உள்ளனர். குளத்தில் இருந்த தண்ணீரை வைத்து பாசனம் செய்து வந்தனர்.
தற்போது நெல் நன்கு வளர்ந்து விரைவில் அறுவடை செய்யப்பட உள்ளது. ஆனால் தற்போது பயிர்களுக்கு போதுமான தண்ணீர் குளத்தில் இல்லை. இதனால் இந்த பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் கருகி வருகின்றன.
குறிப்பாக வயல்கள் பாளம், பாளமாக வெடித்து காய்ந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கடனா அணையில் இருந்து மஞ்சள்நீரோடை குளத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கக் கோரி இப்பகுதி விவசாயிகள், முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கடனா அணை உதவி பொறியாளர் சுந்தர் சிங்கிடம் கேட்ட போது, கார் பருவ சாகுபடிக்கு மஞ்சலோடை குளத்திற்கு தண்ணீர் கிடையாது. கார் பருவ சாகுபடிக்கு நேரடி பாசனத்திற்கு மட்டுமே தண்ணீர் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். இருப்பினும் தற்போது அணையில் 58 அடி நீர்மட்டம் இருப்பதால் பயிர்களை காப்பாற்றுவதற்காக தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.