Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மெல்ல கற்கும் மாணவர்களையும் பயிற்சிகளால் மேம்படுத்தலாம்!

பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாட்டில் ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாதது. மாணவர்கள் தங்களின் கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்வதில் நினைவாற்றலை ஒருங்கிணைக்க உதவுவதோடு வழிகாட்டியாக இருப்பவர் ஆசிரியர். கற்றல் திறன் மேன்மையடைய அடித்தளமான நினைவாற்றலை வளமாக்கும் வழிமுறைகளை கற்பிப்பதோடு, வகுப்பறைக்கு வெளியேயும் மாணவர்கள் பயிற்சியைத் தொடர ஊக்குவிப்பதில் ஆசிரியர்களின் முயற்சி தவிர்க்க முடியாதது. ஒரு மாணவனுக்கு கற்பிப்பதில் ஆசிரியர்களின் பங்கு இல்லையென்றால், மாணவர்களின் திறன் மேம்பாட்டில் எந்த மாற்றத்தையும் காணமுடியாது. ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் ஒவ்வொரு மாணவரும் தங்கள் தனிப்பட்ட ஆளுமைகளையும் அனுபவங்களையும் கொண்டு கற்றல் திறனை வெளிப்படுத்துகிறார்கள். அதை ஆசிரியர் பாராட்டி வரவேற்கும்போது மாணவர்கள் ஊக்கப்பபடுத்தப்படுவது மட்டுமில்லாமல், தங்கள் ஆசிரியருடன் வலுவான உறவை உருவாக்குவதற்கான வாய்ப்பையும் பெறுகிறார்கள். இது பல நேர்மறையான என்ணங்களை மாணவர்களிடையே உருவாக்க வழிவகுக்கும்.

ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்த விரும்பினால், முதலில் தங்களை திறன் மிக்கவர்களாக தயார்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனென்றால் மாணவர்கள் சுய விழிப்புணர்வு மற்றும் தங்களைப் பற்றி சிந்தித்து திட்டமிட்டு செயல்படும் ஆசிரியர்களால்தான் பயனடைவார்கள். அதேபோல் மாணவர்களின் உளவியல் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருவதோடு நினைவாற்றலை மேம்படுத்துவதில்

கவனம் செலுத்தவும் தவறக்கூடாது.

வகுப்பறைகளில் நினைவாற்றலைக் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிகளில் ஒன்று, நினைவாற்றல் என்றால் என்ன? அதை மேம்படுத்த ஏன் பயிற்சி செய்கிறோம்? அதனால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை எளிய முறையில் விளக்குவதும், பல்வேறு நடைமுறைகளில் மாணவர்களை வழிநடத்துவதுமாகும்.

பொதுவாக இயல்பாகவே சிறந்த நினைவாற்றல் கொண்ட மாணவர்கள் வகுப்பறைகளில் நடத்தப்படும் பல்வேறு பாடத்திட்டங்கள் மற்றும் சாராத செயல்பாடுகளில் சிறப்பாகச் செயல்படுகின்றனர். ஆனால், நினைவாற்றல் மற்றும் கற்றலில் பின்தங்கிய மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சில பயிற்சிகளை வழங்க வேண்டியது மிக மிக அவசியமாகும்.

ஒரு குழந்தையின் குறுகிய கால மற்றும் நீண்டகால நினைவாற்றலை பல்வேறு முறைகள் மூலம் மேம்படுத்தலாம். மூளைக்குத் தொடர்ந்து பயிற்சி அளிப்பது படைப்பாற்றலைத் தூண்டுவதோடு மாணவர்கள் கற்றவற்றை தங்கள் நினைவில் தக்கவைத்துக்கொள்ளும் வரம்புகளை அதிகரிக்க உதவும். குறைந்த அளவு நினைவாற்றலைத் தக்கவைக்கும் சக்திகொண்ட மாணவர்களுக்கு சில சீரற்ற எண்களைக் கொடுங்கள். அதன் பிறகு, மாணவர் நீங்கள் சொன்னதை ஒரு நிமிடத்தில் மீண்டும் உச்சரிக்க முயன்றிடச் செய்யுங்கள். அப்போது நீங்கள் முன்பு சொன்ன எண்களின் வரிசையை மாணவர் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். அவற்றில் சிலவற்றை மீண்டும் கேட்க வேண்டும். பயனுள்ள நினைவக மேம்பாட்டை அடைய, தொடர்ந்து ஐந்து நாட்கள் இந்த பயிற்சியை மீண்டும் மீண்டும் வழங்க வேண்டும்.

பலகை அல்லது திரையில் ஒரே மாதிரியான, ஆனால் சற்று வித்தியாசமான இரண்டு புகைப்படங்களை காட்சிப்படுத்தவும். தங்களால் இயன்ற அளவு இரண்டு படங்களில் உள்ள மாறுபாடுகளை அடையாளம் காண அவர்களுக்குக் குறுகிய கால அவகாசம் கொடுங்கள். அதன் பின்னர் அவர்கள் கண்டறிந்து நினைவில் நிறுத்திய மாறுபாடுகளை சொல்லச் சொல்லுங்கள். இப்படித் தொடர்ந்து செய்வதன் மூலம் குறைந்த நினைவாற்றல் கொண்ட மாணவர்களின் நினைவாற்றல் கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுவதை காணலாம். மாணவர்களின் நினைவாற்றலை வளமாக்க நடைமுறையில் இப்படி பல பயிற்சிகள் உள்ளன. ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் நினைவாற்றலின் நிலை அறிந்து கையாண்டால் கற்றல் திறனை வளமாக்கி வெற்றியாளர்களை உருவாக்கலாம்.