Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 72,300 ‘இவி’ சார்ஜிங் நிலையங்கள்: 100% மானியத்துடன் அமைக்க புதிய வழிகாட்டல் வெளியீடு

டெல்லி: ‘பி.எம். இ-டிரைவ்’ திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்க ஒன்றிய அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், ‘பி.எம். இ-டிரைவ்’ என்ற திட்டத்தின் கீழ் 72,300 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கான விரிவான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்களின்படி, நகர்ப்புறங்களில் ஒவ்வொரு 3 கிலோ மீட்டருக்கும், நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25 கிலோ மீட்டருக்கும் ஒரு சார்ஜிங் நிலையம் அமைக்கப்பட வேண்டும். இதன்மூலம், நாடு முழுவதும் நம்பகமான மற்றும் எளிதில் அணுகக்கூடிய சார்ஜிங் வலையமைப்பை உருவாக்குவதே முக்கிய இலக்காகும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனம் அமலாக்க முகமையாக நியமிக்கப்பட்டுள்ளது. மானியமானது, இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் இடங்களைப் பொறுத்து பல நிலைகளில் வழங்கப்படுகிறது. அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பொதுமக்களுக்கு இலவச சார்ஜிங் வசதி வழங்கப்பட்டால், அங்கு நிலையங்கள் அமைக்க 100% மானியம் வழங்கப்படும்.

ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பேருந்து முனையங்கள் போன்ற பொதுப் போக்குவரத்து மையங்களில் அடிப்படை உள்கட்டமைப்புக்கு 80% மற்றும் சார்ஜிங் உபகரணங்களுக்கு 70% மானியம் அளிக்கப்படும். வணிக வளாகங்கள், சந்தைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் அடிப்படை உள்கட்டமைப்புக்கு 80% மானியமும், பேட்டரி மாற்றும் நிலையங்களுக்கு 80% மானியமும் வழங்கப்படும். மேலும், இலகு மற்றும் கனரக வாகனங்களுக்கென பிரத்யேக தொழில்நுட்ப தர நிர்ணயங்களும் இந்த வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை, புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, இந்தியாவின் மின்சார வாகனச் சூழலை மேம்படுத்துவதில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.