Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஐரோப்பிய யூனியன் முழுவதும் பதற்றம் போலந்துக்குள் நுழைந்து ரஷ்ய டிரோன்கள் தாக்குதல்

* வீடுகள், கட்டிடங்கள், பெட்ரோல் பங்குகள் சேதம், நெதர்லாந்து, ஜெர்மனி, இத்தாலியிலும் உஷார்

வார்சா: உக்ரைன்-ரஷ்யா இடையே நடந்து வரும் போரில் ஐரோப்பிய யூனியன் நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவான நிலை எடுத்து ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இந்த நிலையில் நேற்று போலந்து நாட்டின் வான்வெளிக்குள் ரஷ்ய டிரோன்கள் சரமாரியாக அத்துமீறி நுழைந்தன. சுமார் 10க்கும் மேற்பட்ட டிரோன்கள் போலந்து எல்லைக்குள் நுழைந்தன. அத்தனை டிரோன்களையும் போலந்து நாட்டின் வான்பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியது. போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க் கூறுகையில்,‘‘போலந்து வான்வெளிக்குள் ஏராளமான ரஷ்ய டிரோன்கள் அத்துமீறி நுழைந்தன.

நேரடி அச்சுறுத்தல் ஏற்படுத்திய டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன’’ என்றார். போலந்து எல்லை, குடியிருப்பு பகுதிகள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவை சேதமடைந்தன. க்மெல்னிட்ஸ்கியில், ஒரு தையல் தொழிற்சாலை மற்றும் பெட்ரோல் நிலையம் அழிக்கப்பட்டு, மூன்று பேர் காயமடைந்தனர். வின்னிட்சியா, ஜைட்டோமிர் மற்றும் செர்காசி பகுதிகளிலும் சேதம் அடைந்தன. ரஷ்யா டிரோன்கள் தாக்குதலை போலந்து பாதுகாப்பு அமைச்சர் விளாடிஸ்லாவ் கோசினியாக்-காமிஸ் உறுதிப்படுத்தினார்.

நேரடி அச்சுறுத்தல்களை ஏற்படுத்திய பல டிரோன்கள் நேட்டோ படைகளின் உதவியுடன் இடைமறித்து அழிக்கப்பட்டதாக அவர் கூறினார். லுப்ளின் பகுதியில் உள்ள வைரிகி கிராமங்களில் சேதம் ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு ஒரு வீடு தாக்கப்பட்டது, இருப்பினும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. மேலும் டிரோன்கள் ஒரு வீட்டையும் ஒரு காரையும் சேதப்படுத்தியதாக போலந்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே இதுவரை, ஏழு டிரோன்கள் மற்றும் அடையாளம் காணப்படாத ஏவுகணை துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல ரஷ்ய டிரோன்கள் அதன் வான்வெளியை மீறி போலந்து பகுதிக்குள் நுழைந்ததால் இது ஆக்கிரமிப்புச் செயல் என்று போலந்து நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து வார்சா நகரின் வான்வெளி உடனடியாக மூடப்பட்டது.

நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நேட்டோ நட்பு நாடுகளுடன் விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. நெதர்லாந்து நாடு உஷார் படுத்தப்பட்டு எப் 35 விமானங்களை தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளது. அதே நேரத்தில் ஜெர்மனி நாடு பேட்ரியாட் ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளது. இத்தாலியிலும் போர் விமானங்கள் தயார் படுத்தப்பட்டன. இதனால் ஐரோப்பிய யூனியன் நாடுகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

* அடுத்த குறி போலந்தா?

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு போலந்து இப்போது வெளிப்படையான மோதலுக்கு மிக அருகில் உள்ளது என்று பிரதமர் டஸ்க் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் கூறுகையில்,’நாம் போரின் விளிம்பில் இருக்கிறோம் என்று கூறுவதற்கு எனக்கு எந்த காரணமும் இல்லை, ஆனால் ஒரு எல்லை மீறப்பட்டுள்ளது. இந்த நிலைமை இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிக நெருக்கமான போர் போன்ற சூழலை நமக்குக் கொண்டுவருகிறது’ என்றார். இதனால் ரஷ்யாவின் அடுத்த குறி போலந்தா என்ற கேள்வி எழுந்துள்ளது.