Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

யூரோ கோப்பை கால்பந்து: இங்கிலாந்து முன்னேற்றம்

பெர்லின்: யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதியில் விளையாட நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றன. ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நேற்று நடந்த கடைசி காலிறுதியில் நெதர்லாந்து (7வது ரேங்க்) - துருக்கி (42வது ரேங்க்) அணிகள் மோதின. அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்ற முனைப்பில் இரு அணிகளும் கடுமையாகப் போராடின. அதிலும் துருக்கி ஏற்கனவே முன்னணி அணிகளான ஆஸ்திரியா, செர்பியாவை வீழ்த்தியது போல் நெதர்லாந்தையும் பந்தாடலாம் என்ற இலக்குடனேயே விளையாடியது.

அதற்கேற்ப ஆட்டத்தின் முதல் கோலை துருக்கி அணிதான் போட்டது (35வது நிமிடம்). கார்னர் வாய்ப்பில் கோலை நோக்கி வந்த பந்தை சமத் அகய்தீன் தலையில் முட்டி கோலாக்கினார். முதல் பாதி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் துருக்கி முன்னிலை வகித்தது. இடைவேளைக்குப் பிறகு கூடுதல் வேகம் காட்டிய நெதர்லாந்து அணிக்கு 70வது நிடத்தில் டி விரிஜ் அபாரமாக தலையால் முட்டி கோல் போட்டு சமநிலை ஏற்படுத்தினார். அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் நெதர்லாந்து மேற்கொண்ட கோல் முயற்சியில் பந்து துருக்கி வீரர் மெர்ட் முல்துர் கால் மீது பட்டு வலைக்குள் புக , அது சுய கோலாக அமைந்தது (76வது நிமிடம்). ஆட்டத்தில் அனல் பறந்ததால் நெதர்லாந்து தரப்பில் 5 பேர், துருக்கி வீரர்கள் 2 பேர் மஞ்சள் அட்டை காட்டி எச்சரிக்கப்பட்டனர். முரட்டு ஆட்டம் ஆடியதற்காக துருக்கியின் மாற்று வீரர் பெர்துக் ஈல்டிரிம் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்டார்.

பரபரப்பான ஆட்டத்தில் நெதர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கி வென்று கடைசி அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது. காலிறுதியில் இந்த கடைசி ஆட்டம் மட்டுமே கூடுதல் நேரம், ‘பெனால்டி ஷூட் அவுட்’ ஏதுமின்றி 90 நிமிடங்களில் முடிவை எட்டியது. முன்னதாக, டுஸ்ஸல்டார்பில் நேற்று அதிகாலை முடிந்த 3வது காலிறுதியில் இங்கிலாந்து - சுவிட்சலாந்து அணிகள் 1-1 என டிரா செய்தன. ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் இங்கிலாந்து 5-3 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.