Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பழங்குடியின மாணவி கூட்டு பலாத்காரம்; வங்கதேசத்தில் வெடித்தது இனக்கலவரம்: 3 பேர் பலி; ஊரடங்கு உத்தரவு அமல்

டாக்கா: வங்கதேசத்தில் பழங்குடியின மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மூண்ட இனக்கலவரத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தின் தென்கிழக்கு மலைப்பகுதியான சிட்டகாங் பகுதியில், பூர்வகுடி பழங்குடியினருக்கும், வங்காள மொழி பேசும் மக்களுக்கும் இடையே நீண்டகாலமாக இனப் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 1997ம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான போதிலும், அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த 23ம் தேதி காக்ராச்சாரி மாவட்டத்தில் 8ம் வகுப்பு படிக்கும் பழங்குடியின மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கொடூர சம்பவத்தைக் கண்டித்து நடைபெற்ற போராட்டங்கள், தற்போது பெரும் இனக்கலவரமாக வெடித்துள்ளது. நேற்று முன்தினம் காக்ராச்சாரி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரு பிரிவினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். கடைகள், வீடுகள் எனப் பரவலாக தீ வைக்கப்பட்டதால் பெரும் வன்முறை மூண்டது. இந்த மோதல்களில் குறைந்தது 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 13 ராணுவ வீரர்கள், 3 காவலர்கள் உட்பட பலர் படுகாயமடைந்தனர். பதற்றம் நிறைந்த காக்ராச்சாரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் நடமாட்டத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, ‘பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்க வேண்டும், சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’ எனக் கோரி பழங்குடியின மாணவர் அமைப்பான ‘ஜும்மா சத்ர ஜனதா’ காலவரையற்ற சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளது. மேலும், அப்பகுதியில் சுற்றுலா நடவடிக்கைகளையும் முழுமையாக முடக்கியுள்ளது.