எத்தியோப்பிய எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சாம்பல் மேகம்: இந்திய வான்வெளியில் விமானப் போக்குவரத்து பாதிப்பு
எத்தியோப்பியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி அளவில் ஹெய்லி குப்பி எரிமலை வெடித்தது. இதனால் ஏற்பட்ட புகை மேகம் திங்கட்கிழமை காலை 5 மணி அளவில் வானில் பரவி பல்வேறு நாடுகளை நோக்கி நகர்ந்தது. இரவு 11 மணியளவில் இந்தியாவின் வடமேற்கு பகுதிகளை கடந்தது. பின்னர், ராஜஸ்தான், குஜராத், மஹராஷ்டிரா, டெல்லி மற்றும் பஞ்சாப் முழுவதும் பரவியது.
சாம்பல் மேகம் 10 கிலோ மீட்டர் உயரத்துக்கும் மேல் இருந்ததால் டெல்லி போன்ற நகரங்களின் காற்றின் தரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கம் இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிகழ்வின் தாக்கம் சில மணி நேரங்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்றும் மேகம் விரைவாக கீழே நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இதை தொடர்ந்து, விமான போக்குவரத்துத் துறையின் இயக்குனரகம் விமானிகளுக்கு அவசர ஆலோசனை பிறப்பித்தது. எரிமலை சாம்பல் கண்ணாடி போல கூர்மையான சிலிகேட் துகள்களை கொண்டது என விமானிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இது என்ஜினுக்குள் போனால் உள்ளிருக்கும் உதிரி பாகங்களை சிதைத்து சில சமயம் எஞ்சினையே அனைத்து விடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சாம்பல் பரவி இருக்கும் பகுதிகளில் குறிப்பிட்ட உயரங்கள் வரை விலகி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.


