எஸ்டேட் காவலாளி மீது தாக்குதல் விவகாரம் பாஜ மாநில செயலாளர் மீது நடவடிக்கை கோரி மனு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
சென்னை: ஜாதிப்பெயரை கூறி திட்டியதுடன் தாக்குதல் நடத்தியதாக எஸ்டேட் காவலாளி கொடுக்க புகாரின் அடிப்படையில் பாஜ மாநில செயலாளர் சிபி சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சேலம், ஏற்காட்டைச் சேர்ந்த வெள்ளையன் என்பவர், அங்குள்ள எஸ்டேட் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். அவரது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள நிலத்தின் உரிமையாளரின் மகனான பாஜ ஸ்டாட்டப் பிரிவு மாநில செயலாளர் சிபி சக்கரவர்த்தி மற்றும் மூன்று பேர் சேர்ந்து, கடந்த 19ம் தேதி கடுமையாக தாக்கியதாகக் கூறி, வெள்ளையன் ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரில், சிபி சக்கரவர்த்தி என்னை ஆபாசமாகவும், ஜாதி பெயரைக் கூறியும் திட்டினார் என்று கூறியிருந்தார். மேலும், புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் அவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், எனது புகார் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.