ஈரோடு சம்பத் நகரில் திருப்பூர் குமரன், ஈ.வி.கே.சம்பத் சிலைகள்: காணொலியில் முதல்வர் திறந்து வைத்தார்
ஈரோடு: ஈரோடு சம்பத் நகரில் சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் மற்றும் திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.சம்பத் ஆகியோரின் திருவுருவ சிலைகள் திறப்பு விழா, வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. சென்னையில் இருந்தபடி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சிலைகளை திறந்து வைத்தார்.அதனைத்தொடர்ந்து, அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வர் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம் அமைந்துள்ள பிரதான சாலைக்கு தியாகி குமரன் சாலை என பெயர் வைத்தார். தியாகி குமரன் சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தவுடன், முதல்வர் சட்டப்பூர்வமாக சிலை வைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 1981ம் ஆண்டு அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் திறக்கப்பட்ட ஈ.வி.கே.சம்பத்தின் மார்பளவு சிலைக்கு பதிலாக முழு உருவச்சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் தற்போது இங்கு திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சிலைகளுக்கு கீழே நூலகம் அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போதே முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தீரன் சின்னமலைக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு சென்றுள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார். தீரன் சின்னமலையின் வாரிசுதாரர்கள் தெரிவிக்கும் கருத்தின்படி சிலை அமைக்க முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். எனவே, இதற்கான பணிகளை விரைவாக ஆரம்பித்து முடிக்கவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.