செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்ட நிலையில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுகவில் 42 புதிய நிர்வாகிகள்: மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி
கோபி: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று கடந்த மாதம் 5ம் தேதி முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். ஒருங்கிணைப்பு பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடுவும் விதித்தார். அதைத்தொடர்ந்து மறுநாளே முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களான முன்னாள் எம்.பி. சத்தியபாமா, ஒன்றிய செயலாளர்கள் தம்பி என்கிற சுப்பிரமணியம், குறிஞ்சிநாதன் உள்ளிட்ட 13 பேரின் கட்சி பதவிகளையும், அதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன் உள்ளிட்ட 40 பேரின் கட்சி பதவிகளை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பறித்தார்.
இந்நிலையில், தற்போது ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தில் நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதில் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக இணைச்செயலாளராக கோபி நகராட்சி முன்னாள் தலைவர் ரேவதி தேவியும், பொருளாளராக நடுப்பாளையம் சந்திரசேகரும், மாவட்ட மகளிர் அணி செயலாளராக மொடச்சூர் மணி, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளராக தனகோட்டிராம், டி.என்.பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளராக சிவக்குமார், கோபி நகர துணைச்செயலாளராக சிவக்குமார் உட்பட 42 புதிய நிர்வாகிகளை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமித்துள்ளார். செங்கோட்டையனிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் பொறுப்பு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.
ஆனால் மாவட்ட செயலாளராக இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. தற்போது கோபி நகர செயலாளராக உள்ள பிரினியோ கணேஷ், அந்தியூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் எஸ்.எஸ்.ரமணிதரன், இ.எம்.ஆர்.ராஜா உள்ளிட்டோர் மாவட்ட செயலாளர் பதவியை பெறுவதற்கு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. மாவட்ட செயலாளர் பொறுப்பிற்கு வருபவரே கோபி தொகுதி வேட்பாளராக வாய்ப்பு உள்ளதால் கடும் போட்டி நிலவி வருகிறது.