ஈரோடு வ.உ.சி. பூங்காவில் மக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள்: மாநகராட்சி நிர்வாகம் பிடிக்க வலியுறுத்தல்
ஈரோடு: ஈரோடு வ.உ.சி. பூங்காவில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கும்பலாக வலம் வரும் தெருநாய்களை பிடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் தினசரி காய்கறி மார்க்கெட், மாவட்ட விளையாட்டு மைதானம், அரசு அருங்காட்சியகம், பூங்கா, சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இதனால், அப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், வ.உ.சி. பூங்கா வளாகத்தில் சமீப காலமாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளன. ஒரு சில நேரங்களில் மார்க்கெட்டிற்கு காய்றி வாங்க வருபவர்களை துரத்துவதும், கடிப்பதும் வாடிக்கையாக உள்ளது.
இதேபோன்று, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்று வருவதால், மாவட்டம் முழுவதும் இருந்து தினசரி 100க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் வந்து செல்கின்றனர். அவர்களை தெருநாய்கள் கடிக்க விரட்டுவதால், விளையாட வருபவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இருசக்கர வாகனத்தில் வருபவர்களையும் தெருநாய்கள் துரத்துவதால், அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பெரிய அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன்பாக, வ.உ.சி பூங்காவில் வலம் வரும் தெருநாய்களை பிடிக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.