ஈரோடு : ஈரோடு தலைமை அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை அலைக்கழிப்பதாக புகார் எழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் டிவிஎஸ் மேடு பகுதியை சேர்ந்த முத்துசாமி மனைவி பானுமதி (65). இவர் கடந்த 2 ஆண்டுகளாக கர்ப்பபை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இருப்பினும் நோய் குணமாகததால், பானுமதி ஈரோடு தந்தை பெரியார் தலைமை அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவருடன் இவரது மகன் சபரிநாதன் (38) உடன் இருந்தார். இந்நிலையில், தனது தாய் பானுமதியை புற்றுநோய் மருத்துவரை பார்க்க விடாமல் பரிசோதனை என கூறி அலைக்கழிப்பதாக நேற்று ஈரோடு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷிடம் புகார் அளித்தார்.
இதுகுறித்து பானுமதி மகன் சபரிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: எனது அம்மா பானுமதிக்கு கர்ப்பப்பை புற்றுநோய்க்காக ஈரோடு தந்தை பெரியார் தலைமை அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 6ம் தேதி வந்தோம். எனது அம்மாவுக்கு நோய் பாதிப்பு தீவிரமாக இருப்பதால் உள் நோயாளியாக அனுமதித்தேன். புற்றுநோய் மருத்துவரை பார்க்க அனுமதி கேட்டபோது, ரத்த பரிசோதனை எடுக்க அறிவுறுத்தினர். அதன்பேரில் நேற்று முன்தினமே ரத்த பரிசோதனைக்கு ரத்தம் எடுத்தனர்.
மீண்டும் இன்று (நேற்று) காலை ரத்த பரிசோதனைக்கு ரத்தம் எடுத்தனர். அதனை ரத்த பரிசோதனை ஆய்வு கூடத்திற்கு எடுத்து சென்றபோது, அவர்கள் எச்ஐவி சோதனைக்காக தான் ரத்தம் எடுக்கப்பட்டது. ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதால் மீண்டும் ரத்தம் பரிசோதனை வேண்டாம் என கூறி விட்டனர். ஆனால், செவிலியர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசமான, வயதான பெண் என்றும் பாராமல் இரு முறை ரத்தம் எடுத்துள்ளனர்.
இதேபோல, ஸ்கேன் எடுத்து வர அனுப்பி வைத்தனர். அங்கு சென்றபோது ஸ்கேன் எடுக்க நேரமாகி விட்டது. நாளை எடுத்து கொள்ளுங்கள் என கூறி அனுப்பி வைத்தனர். கடந்த 2 நாட்களாக மருத்துவரை பார்க்க விடாமல் பல்வேறு சோதனை என கூறி அலைக்கழிக்கின்றனர். இங்குள்ள பணியாளர்கள், செவிலியர்கள் நோயாளியை தரக்குறைவாக நடத்துகின்றனர்.
எனவே, அரசு மருத்துவமனையில் எங்களை போல ஏழை, எளிய மக்கள் பயன்பெற நோயாளிகளை அலைக்கழிக்காமல் எளிதில் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும், நோயாளிகளை மரியாதையுடன் நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் அளித்த புகாருக்கு அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
உறைவிட மருத்துவ அதிகாரி விளக்கம்
ஈரோடு அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவ அதிகாரி டாக்டர் சசிரேகா கூறியதாவது: பானுமதிக்கு உரிய சிகிச்சை முறையாக அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு நுரையீரல் மற்றும் பல்வேறு உடல் சார்ந்த பரிசோதனைகள் முடிந்துள்ளன. நேற்று முன்தினம் ஒரு முக்கிய பரிசோதனைக்காக ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. அது பரிசோதனை மையத்துக்கு வழங்கப்பட்டு இருந்தது. அதற்கான முடிவு 24 மணிநேரத்துக்கு பின்பே கிடைக்கும் என்பதால், அந்த முடிவு சிகிச்சை விவரங்கள் அடங்கிய கோப்பில் இணைக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று அவரை பரிசோதனை செய்த டாக்டர், மற்றொரு பரிசோதனைக்காக ரத்த மாதிரி எடுக்க உத்தரவிட்டார். பின்னர் ரத்த மாதிரியை பரிசோதனை கூடத்தில் வழங்கும்படி பானுமதியின் மகன் சபரி நாதனிடம் கொடுத்து அனுப்பினர். அவர் பரிசோதனை கூடத்துக்கு சென்றபோது ஏற்கனவே ரத்த மாதிரி வந்துவிட்டது. அதற்கான முடிவை விரைவில் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆய்வக ஊழியர் தெரிவித்தார்.
இது சபரிநாதனுக்கு ஆத்திரத்தை வரவழைத்துள்ளது. அவரிடம் மருத்துவ குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியபோது தவறான புரிதலால் புகார் அளித்ததாக தெரிவித்தார். தொடர்ந்து, அவருடைய தாய்க்கு ஈரோடு அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. புற்றுநோயை பொறுத்தவரை அரசு மருத்துவமனையில் மிக உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிகளுக்கு தியானம், யோகாசனம், ஆகிய வழிமுறைகளுடன், சித்தா மருத்துவ துறையுடன் இணைந்து மிக சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் சிகிச்சை குறித்து எந்த சந்தேகமும் அடைய வேண்டியதில்லை. குறைகளை எங்களிடம் நேரடியாக கூறலாம். இவ்வாறு அவர் கூறினார்.