Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சமத்துவம், சமூகநீதி தேவையை பற்றி மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் ஜாதிய உணர்வு, பாலின பாகுபாடு தலையெடுக்க கூடாது: ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

சென்னை: கல்வி தொடர்பாக நீங்கள் செய்யக்கூடிய பணிகளை தாண்டி மாணவர்களுக்கு ஜாதிய உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனங்கள் தலையெடுக்காமல் ஆசிரியர்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். சமத்துவம், சமூகநீதி தேவையை பற்றி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்து சொல்ல வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறினார்.

சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த முப்பெரும் விழாவில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,715 புதிய ஆசிரிகளுக்கான நுழைவுநிலை பயிற்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, பயிற்சி கையேட்டை வெளியிட்டார். மேலும், ரூ.277 கோடியில் பாரத சாரண சாரணியர் தலைமை அலுவலக கட்டிடம் மற்றும் 243 புதிய பள்ளி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.94 கோடியில் கட்டப்பட்டுள்ள 59 பள்ளி கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பிறகு அவர் பேசியதாவது: ஆசிரியர் என்பவர் பாடப்புத்தகத்தில் இருக்கிற பாடங்களை மட்டும் சொல்லிக்கொடுக்கிறவர் இல்லை. தன்னுடைய கல்வியையும், அனுபவத்தையும் சேர்த்து மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்து, எதிர்காலத்தை நல்லொழுக்கமிக்க நாளைய சமுதாயத்தை உருவாக்குகிறவர்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் வகுப்பறைக்குள் நுழைகின்றபோதும் நினைவில் கொள்ள வேண்டியது, உங்கள் முன்னாடி உட்கார்ந்திருக்கிறவர்கள் பாடம் கற்றுக்கொள்கிற மாணவர்கள் மட்டுமல்ல, எதிர்கால டாக்டர்கள், இன்ஜினியர்கள், ஆராய்ச்சியாளர்கள், நாட்டினுடைய எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் அரசியல் தலைவர்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

நாட்டின் எதிர்கால தூண்களுக்கு நாம் சொல்லிக்கொடுக்கப்போகிறோம் என்கிற பொறுப்புணர்வுதான் உங்களிடம் மேலோங்கி இருக்க வேண்டும். இத்தனை ஆண்டு காலமாக நீங்கள் மாணவர்களாக இருந்து, கல்வியை கற்று, சமூகத்தை உள்வாங்கி பெற்றிருக்கின்ற அனுபவத்தை அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு கடத்தி, அந்த சமூகத்துக்கே ஒளியேற்றி வைக்கப்போகிறீர்கள்.

மாணவர்களுடைய அறிவாற்றலுக்கு கொண்டுபோய் அவர்களுடைய சிந்தனையை தூண்டி, அவர்களுடைய அறிவை மேம்படுத்த வேண்டிய பெரும் பணி உங்களிடத்தில் தான் இருக்கிறது. ஏனென்றால், அந்தளவுக்கு அறிவார்ந்த தகவல்கள் கொஞ்சமும் குறைவு இல்லாமல் கொட்டிக் கிடக்கிறது. தேவையற்ற குப்பையும் இருக்கிறது. அதற்காக தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் குறை சொல்ல முடியாது. நாம்தான், நம்ம குழந்தைகளுக்கு, நம்ம மாணவர்களுக்கு சரியானதை அடையாளம் காட்ட வேண்டும்.

எதற்கெடுத்தாலும் டெக்னாலஜியை நம்பி இருக்கிற மாணவர்களாக மாறிவிடக் கூடாது. எதுவாக இருந்தாலும் கூகுளிடம் கேட்டுக் கொள்ளலாம், ஏஐ-யிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனம் வந்துவிடக்கூடாது. தொழில்நுட்பத்துக்கும், மனித சிந்தனைக்குமான வேறுபாட்டை உணர்த்த வேண்டும். அறத்தின் வலிமையை, நேர்மையின் தேவையை மாணவர்களுக்கு நீங்கள்தான் கற்றுக் கொடுக்க வேண்டும்.

மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை கடந்து இலக்கியங்களை, பொது அறிவு தகவல்களை, சமூக ஒழுக்கத்தை, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை, காலநிலை மாற்றம் குறித்த தெளிவை, மாற்று எரிசக்தியின் தெளிவை பற்றியெல்லாம் ஆசிரியர்கள் உரையாடி மாணவர்களுக்கு புரியவைக்க வேண்டும். என்னடா, நம்ம டீச்சர் போரடிக்கிறார்களேன்னு அவங்க நினைத்துவிடக்கூடாது. மாணவர்களிடம் ஆசிரியர்கள் ஒரு நண்பர்களாக பழக வேண்டும்.

யூடியூபில் சில ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்கள் கிரிட்டிக்கல் திங்கிங், பிராப்ளம் சால்விங் பற்றியெல்லாம் கிரியேட்டிவ்வாக சொல்லித்தர சில வீடியோக்கள் வருகிறது. அந்தமாதிரி நீங்களும் புதுபுது முயற்சிகளை எடுக்க வேண்டும்.  திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாட்டின் கல்வி சூழலில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறோம். இன்றைக்கு நம் அரசு பள்ளி மாணவர்கள் நம் பெருமையின் அடையாளமாக உயர்ந்து வருகிறார்கள்.

பள்ளிகளின் உட்கட்டமைப்பும், தரமும் உயர்ந்து இருக்கிறது. அவர்களுக்கு சமூக அறிவும், உலக அறிவும் கிடைக்க வெளிநாடு சுற்றுலா அழைத்துக் கொண்டு போகிறோம். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி பொருளாதார சூழல் காரணமாக தடைபடக் கூடாது என்று புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

இது எல்லாவற்றையும்விட, அறிவு பசியோடு பள்ளிக்கு வருகின்ற மாணவர்கள் பசியோடு இருக்கக்கூடாது என்று சூடான, சுவையான சத்துணவை காலை உணவாக வழங்குகிறோம். கல்வி தொடர்பாக நீங்கள் செய்யக்கூடிய பணிகளை தாண்டி மாணவர்களுக்கு ஜாதிய உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனங்கள் தலையெடுக்காமல் ஆசிரியர்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சமத்துவம் மற்றும் சமூகநீதி தேவையை பற்றி மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். மாணவர்களுக்கு நல்ல ரோல் மாடல்களை அறிமுகப்படுத்துங்கள். நீங்களே ஒரு ரோல் மாடல்களாக இருங்கள். பகுத்தறிவை கற்றுத்தாருங்கள். மாணவர்களிடம் அடிக்கடி மனதுவிட்டு பேசுங்கள். நூலகங்களையும், வாசிப்பு பழக்கத்தையும் அறிமுகப்படுத்துங்கள். ஆசிரியர்களின் பணிகள் சிறக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

* குழந்தைகளுக்கு இரண்டாவது பெற்றோர் ஆசிரியர்தான்

‘‘இன்னொரு முக்கியமான விஷயத்தை நீங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு எந்தளவுக்கு அறிவாற்றல் முக்கியமோ, அதே அளவுக்கு உடல் நலமும், மன நலமும் முக்கியம். மாணவர்களுக்கு ரொம்ப அழுத்தம் கொடுக்கக்கூடாது. நாம் அன்பாக, பக்குவமாக சொன்னால் மாணவர்கள் புரிந்து கொள்வார்கள். சில குழந்தைகள் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருப்பார்கள்.

சிலர் கலகலன்னு பேசுவாங்க. சிலர் படித்த குடும்பங்களில் இருந்து வந்திருப்பார்கள். சில குடும்பங்கள் இப்போதுதான் கல்வி கற்க தொடங்கி இருப்பார்கள். எல்லோர் வீட்டிலும் ஒரே சூழல் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அதனால் எல்லோரையும் ஒரே அளவுகோளோடு முன்முடிவோடு அளவிடக்கூடாது.

அவர்களின் குடும்ப சூழ்நிலை என்ன? அவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்னை என்ன என்று கவனித்து அவர்களை வளர்த்தெடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஏனென்றால் நீங்கள்தான் அந்த குழந்தைகளுக்கு இரண்டாவது பெற்றோர். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இன்றைக்கு இருக்கக்கூடிய சூழ்நிலையில் பெற்றோர்களைவிட ஆசிரியர்கள்தான் மாணவர்களுடன் அதிக நேரம் இருக்கிறீர்கள்’’ என்று முதல்வர் கூறினார்.

* முதல்வரை வரவேற்ற ரோபோ

விழாவுக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகளை விழா மேடையில் நாய் போன்ற வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட ரோபோ கைகுலுக்கி வரவேற்றது. மேலும், விழாவுக்கு வந்த அனைவரையும் கைகூப்பி வணக்கம் தெரிவித்தது பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தியது.