உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவை புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் பானு முஸ்தாக் தொடங்கிவைத்தார். ஆனால் தசராவை இஸ்லாமிய பெண் தொடங்கிவைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ உச்சநீதிமன்றம் வரை சென்றது. ஆனால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தசரா விழா ஒரு சமத்துவ விழா, இதை ஏற்கனவே அப்துல்கலாம் உள்ளிட்ட பிரபலமடைந்த இஸ்லாமிய சமூகத்தினர் தொடங்கிவைத்துள்ளனர். தற்போது கன்னட இலக்கியத்துக்காக புக்கர் பரிசு வென்றுள்ள பானு முஸ்தாக் தொடங்கிவைப்பது பொருத்தமானது அரசியல் செய்யும் பாஜ அதை தேர்தல் நேரத்தில் செய்யட்டும்.
பிரசித்தி பெற்ற தசரா விழாவை கொண்டாட மசூதி, ஆலயம், கோயிலை விட்டு அனைவரும் வெளியே வர வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். எழுத்தாளர் பானு முஸ்தாக் கூறுகையில், நான் பலமுறை சாமுண்டி மலைக்கு சென்று சாமுண்டீஸ்வரி தேவியை மலர் தூவி வழிபட்டுள்ளேன். கற்பூர தீபாராதனை ஏற்றுள்ளேன். எ்ன்னிடம் மத வேறுபாடு கிடையாது. மனிதராக பிறக்கும் ஒவ்வொருவருக்கும் கொள்கை, கோட்பாடுகள், சிந்தாந்தம், வழிபாட்டு உரிமைகள் வேறாக இருந்தாலும் சமூகத்தின் பார்வையில் நாம் மனிதர்கள். மனிதர்களாக இருந்தால், மனிதநேயம் இருக்க வேண்டும். அதைவிட பெரிய சொத்து மானிடத்திற்கு கிடையாது. மதம் குறுக்கே வந்து மனிதநேயத்தை துண்டிக்க நாம் வாய்ப்பு கொடுக்காமல் வாழ வேண்டும் என்றார்.
இந்நிலையில் மைசூரு சாமுண்டீஸ்வரி மலை கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த ஆண்டு 11 நாட்கள் தசரா கொண்டாடப்படுகிறது. சாமுண்டி மலை, கே.ஆர்.எஸ். அணை, பிருந்தாவனம், அரண்மனை ஆகியவன மின்விளக்கொளியில் ஜொலிக்கிறது. குப்பண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி நடந்து வருகிறது. இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டி, கவியரங்கம், பாரம்பரிய கலைகள், உணவு திருவிழா என்று ஆங்காங்கே களைகட்டியுள்ளது. தசராவின் இறுதிநாள் தங்க அம்பாரியை யானைகள் சுமந்து வரும் ஜம்புசவாரி நடைபெறுகிறது.
யானைப்பாகன்கள் குடும்பம் வசிப்பதற்கு தற்காலிக வீடுகளை அரசு செய்து கொடுத்துள்ளது. அவர்களது குழந்தைகள் கல்வி கற்பதற்கு தற்காலிக பள்ளி, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மைசூரு மாநகரில் முகாமிட்டுள்ளனர். தினமும் பல்வேறு இடங்களுக்கு சென்று தசரா விழாக்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்ச்சியை வௌிப்படுத்துகின்றனர். இந்நிலையில் சாமராஜேந்திர உடையார் அரண்மனையில் மன்னர் குடும்பத்தின் சார்பில் தனியார் தர்பார் நடைபெற்றது. மைசூரு மன்னர் குல பாரம்பரியத்தின் படி சாமி படங்களுக்கு மன்னரும் மைசூரு-குடகு மக்களவை தொகுதி உறுப்பினருமான யதுவீர கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் பூஜை செய்தார்.
பின்னர் மன்னர் காலத்தில் பயன்படுத்திய ஆடைகள் அணிந்துகொண்டு சுமார் 700 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான தங்க சிம்மாசனத்திற்கு மன்னர் பூஜை செய்தார். அதை தொடர்ந்து அரண்மனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார். பின்னர் அரண்மனை வளாகத்தில் உள்ள ஒவ்வொரு கோயில்களுக்கும் சென்று குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் சிம்மாசனத்தில் அமர்ந்து அரண்மனை ஊழியர்களுடன் தர்பார் நிகழ்ச்சி நடத்தினார். இதேபோல் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டிணத்தில் தேவி முத்தாரம்மன் கோயிலில் தசராவிழா விமர்சையாக பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. மகிஷாசூரனை துர்கை வதம் செய்யும் நிகழ்ச்சியை காண ஆண்டுதோறும் திரளானபக்தர்கள் கூடுவது தசரா விழாவின் சிறப்பு அம்சமாகும்.