சென்னை: டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் சத்யராஜ், கார்த்திக், இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் வீடுகளுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் க்ரைம் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில்,‘அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீடு, நடிகர்கள் சத்யராஜ், கார்த்திக், இயக்குநர் அமீர், எஸ்.வி.சேகர், ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் ஜெர்மன் தூதரகத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் சற்று நேரத்தில் அந்த குண்டுகள் வெடிக்கும்,’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து உடனே போலீசார் பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் அளித்தனர். அதன்படி, பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி, சென்னை ஆழ்வார்பேட்டை மகாராஜா சூர்யா சாலையில் உள்ள நடிகர் கார்த்திக், தி.நகர் பாக்கிரதி அம்மாள் தெருவில் உள்ள சினிமா இயக்குநர் அமீர், நடிகர் சத்யராஜ், மந்தைவெளியில் உள்ள எஸ்.வி.சேகர், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரது வீடுகளிலும், ஜெர்மன் துணை தூதரகத்திலும் வெடிகுண்டு நிபுணர்கள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எந்த ஒரு மர்ம பொருளும் சிக்கவில்லை. இது வெறும் புரளி என தெரியவந்தது. அதைதொடர்ந்து, தேனாம்பேட்டை, அபிராமபுரம், பட்டினப்பாக்கம், பாண்டிபஜார் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்த மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் மர்ம நபரை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.