Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட தமிழ்நாடு மலையேற்ற திட்டம் ஓராண்டை கடந்தது

சென்னை: பொறுப்பான மலையேற்றம் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட தமிழ்நாடு அரசின் முதன்மை திட்டமான தமிழ்நாடு மலையேற்ற திட்டம், ஒரு வருடத்தை கடந்து வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்:

தமிழ்நாடு அரசின் வனத்துறை மற்றும் தமிழ்நாடு வன அனுபவங்கள் கழகத்தின் (TNWEC) கூட்டு முயற்சியாக, இயற்கை வளத்தை போற்றுவதை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு மலையேற்றத்திட்டம் (Trek Tamil Nadu) மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களால் 2024 ஆம் ஆண்டில் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட, அழகிய வனம் மற்றும் வனஉயிரினப்பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி கவனமாக கட்டமைக்கப்பட்ட மலையேற்ற வழித்தடங்களில், மலையேற்றம் மேற்கொள்பவர்கள் சிறந்த அனுபவங்களை பெறும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டு, அதில் வெற்றியும் கண்டுள்ளது. இதன் மூலம் இத்திட்டம் சூழல் பாதுகாப்பு மற்றும் உள்ளூர் மக்களின் பங்கேடுப்பை உள்ளடக்கி, நாட்டின் சூழல் சுற்றுலாவிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

எனவே, மலையேற்றம் மேற்கொள்பவர்கள் தமிழ் நாட்டின் இயற்கை அழகை பாதுகாப்புடனும், பயிற்சி பெற்ற வழிகாட்டிகளின் உதவியுடனும் அனுபவித்து மகிழ்ந்திட வழிவகை செய்துள்ளது. இத்திட்டம் வனப்பகுதியை ஒட்டியுள்ள பழங்குடியினர் மற்றும் கிராம மக்களுக்கு மலையேற்ற வழிகாட்டிகளுக்கான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கி, உள்ளூர் மக்களின் பங்களிப்பை ஊக்குவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது.

பொதுமக்களின் பாராட்டையும், உற்சாகமான பங்கேற்பையும் பெற்று, தமிழ்நாடு மலையேற்றத்திட்டம் கடந்த ஆண்டு 15.500-க்கும் மேற்பட்ட மலையேற்றம் மேற்கொள்பவர்களை நம் மாநிலத்தின் அழகிய வனப் பாதைகள் வழியாக பாதுகாப்பாக வழிநடத்தியுள்ளது. இத்திட்டத்தின் சுற்றுச்சூழல் உணர்வுள்ள அணுகுமுறை மற்றும் தலைசிறந்த ஒருங்கிணைப்பு பொதுமக்களிடம் மலையேற்றம் செல்வதற்கான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.

ஒரு வருட காலத்தில், தமிழ்நாடு மலையேற்றத்திட்டம் சமூக அடிப்படையிலான சூழல் சுற்றுலாவில் மாதிரித் திட்டமாக இந்திய அளவில் திகழ்கிறது. இதுவரை இதில் பங்குபெற்ற 15,500-க்கும் மேற்பட்ட நபர்களில் மூன்றில் ஒரு பகுதி பெண்கள் என்பது, மலையேற்றம் போன்ற நடவடிக்கைகளில் பெண்களின் ஆர்வமும் பங்கேற்பும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதை வெளிப்படுத்துகிறது. கல்வி நிறுவனங்களின் மூலம் இதுவரை 1,400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர். மேலும், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட சர்வதேச சுற்றுலா பயணிகள் பங்கேற்றுள்ளனர் என்பது, தமிழ்நாடு மலையேற்றத்திட்டம் பல்வேறு பண்பாட்டு அனுபவங்களையும். பல்வேறு மக்களையும் இணைக்கும் முயற்சியாக மாற்றியுள்ளது.

தமிழ்நாடு மலையேற்றத்திட்டத்தில் அதிகபட்ச பங்கேற்பாளர்கள் கொண்ட முக்கிய மலையேற்ற பாதைகள் பின்வருமாறு:

ஏலகிரி சுவாமிமலை திருப்பத்தூர் (2,209 பயணிகள்). குடியம் குகைகள். திருவள்ளூர் (1.743 பயணிகள்). பரளியார். கோயம்புத்தூர் (982 பயணிகள்), பார்சன்ஸ் பள்ளத்தாக்கு-முக்குர்தி குடில், நீலகிரி (835 பயணிகள்), அவலாஞ்ச் - கோலரிபேட்டா, நீலகிரி (729 பயணிகள்) வனப்பகுதியைச் சேர்ந்த கிராமங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள். பெண்கள் உட்பட, மலையேற்ற வழிகாட்டிக்கான பயிற்சி பெற்று, சான்றளிக்கப்பட்டு, மலையேற்ற வழிகாட்டிகளாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால், உள்ளூர் மக்களுக்கு நிலையான வாழ்வாதாரம் உருவாக்கப்பட்டு, வன வளங்களின் மீதான அவர்களின் அக்கறையை அதிகரிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் உள்ளூர் பழங்குடியின மக்களின் வருமானத்தை அதிகரிக்கவும், மலையேற்றம் மேற்கொள்பவர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும் உள்ளூர் பாரம்பரிய உணவு வகைகளும் வழங்கப்படுகின்றன.

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வன உயர்பயிற்சியகத்துடன் இணைந்து அனைத்து மலையேற்ற வழிகாட்டிகளுக்கும் மாநில அளவிலான வழிகாட்டி பயிற்சி நடத்தப்பட்டது. இதில் சுற்றுச்சூழல் நெறிமுறைகள், பல்லுயிர்களைப்பற்றி எடுத்துரைத்தல், முதலுதவி, விருந்தோம்பல் மற்றும் மலையேற்ற நடவடிக்கைகள் ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மலையேற்றத்திட்டத்தின் வலைத்தளம் (www.trektamilnadu.com) பின்வருவனவற்றுடன் தடையற்ற இணைய வழி அனுபவத்தை வழங்குகிறது.

    • முப்பரிமாண அனிமேஷன் செய்யப்பட்ட பாதை காணொளிகள்.
    •  மலையேற்ற பாதை புகைப்படங்கள், மலையேற்ற முன்பதிவு செய்ய வேண்டிய

      வழிமுறைகள், கொண்டு செல்ல வேண்டிய பொருட்கள். செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை தொடர்பான தகவல்கள்.

    • இணைய வழி முன்பதிவு மற்றும் கட்டணம்.
    •  இணைய வழி பதிவுச்சீட்டு.
    •  மலையேற்றக்காரர்களுக்கான இணைய சான்றிதழ்கள்.

மலையேற்றத்திட்டத்தின் முனைப்பான சந்தைப்படுத்துதல் மூலம் நாடு முழுவதும் அதன் வரம்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. SATTE 2025 (புது தில்லி), TTF 2025 (சென்னை) மற்றும் GWF 2025 (புது தில்லி) உள்ளிட்ட முக்கிய தேசிய சுற்றுலா தொடர்பான அரங்கங்களில் இம் மலையேற்றத்திட்டம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மலையேற்றத்திட்டத்தின் புதுமையான அணுகுமுறையை அங்கீகரிக்கும்

விதமாக, பெறப்பட்டுள்ள விருதுகள்:

  • "Most Exclusive Product " - TTF சென்னை 2025.
  • "Best Niche Tourism Operator விருது" -தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் 2025.

தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தின் அனைத்து செயல்பாடுகளும் தமிழ்நாடு வனம் மற்றும் வனஉயிரினப்பகுதிகள் (மலையேற்றத்தை ஒழுங்குபடுத்துதல்) விதிகள் 2018-ஐ பின்பற்றி, பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையை உறுதி செய்கின்றன. ஒவ்வொரு மலையேற்றமும் முதலுதவி மற்றும் அவசரகால நடவடிக்கைகளில் பயிற்சி பெற்ற வழிகாட்டிகளால் வழிநடத்தப்படுகிறது. மேலும் அனைத்து மலையேற்றம் மேற்கொள்பவர்களுக்கும் மலையேற்ற வழிகாட்டிகளுக்கும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீடு நிறுவனத்துடன் இணைந்து காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இம்மலையேற்றத்திட்டம், மேன்மேலும் வளர்ச்சியடைய பின்வருவனவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்பட உள்ளது:

  • 40 முதல் 50+ மலையேற்ற பாதைகளை அதிகப்படுத்துதல்.
  • தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த சூழல் சுற்றுலா தொகுப்புகளை உருவாக்குதல்.
  • மலையேற்ற வழிகாட்டிகளுக்கு அவ்வப்போது புத்துணர்ச்சி பயிற்சிகள் மற்றும் வெளி அறிவு கற்றல் பயணங்களை நடத்துதல்.
  • அனுபவ வழிக் கற்றலை ஊக்குவிக்க பள்ளி மற்றும் கல்லூரிகளுக்ககான தனித்துவம் மிக்க மலையேற்ற திட்டங்களை வகுத்தல்.

துவங்கப்பட்டு ஒரு வருடத்திலேயே உள்ளூர் சமூகத்தால் இயக்கப்படும் சூழல் சுற்றுலா திட்டமான தமிழ்நாடு மலையேற்ற திட்டம் தொழில்நுட்ப பயன்பாடு, இயற்கை பாதுகாப்பு மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான தேசிய அளவிலான தரத்தை உறுதிசெய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு மலையேற்றமும் மக்களுக்கும் வனப்பகுதிக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதுடன். எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு அடியும். இயற்கையின் மீது மக்களுக்கு உள்ள பிணைப்பு, பாதுகாப்பு மற்றும் உள்ளூர் சமூக மக்களின் வளர்ச்சியினை உறுதிப்படுத்துகிறது