பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் கிண்டி சுற்றுச்சூழல் பூங்காவில் உள்ள தோட்டக்கலை நாற்றங்கால், தன்ஹோடா விற்பனை நிலையம்
சென்னை: கிண்டி சுற்றுச்சூழல் பூங்காவில் உள்ள தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினால் புதிதாக ஏற்படுத்தப்பட்ட தோட்டக்கலை நாற்றங்கால் மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் விற்பனை நிலையமானது சுற்றுச்சூழல் மற்றும் தோட்டக்கலை ஆர்வலர்களின் வார இறுதியை இயற்கையுடன் செலவிடும் விருப்பமான இடமாக வேகமாக வளர்ந்து வருகிறது.கிண்டியில் அமையவுள்ள சுற்றுச்சூழல் பூங்காவிற்குள் அமைந்துள்ள இந்த நாற்றங்கால், பல்வேறு வகையான அலங்கார தாவரங்கள், பழ மரக்கன்றுகள், மருத்துவ செடிகள், உட்புற தாவரங்கள், பூர்வீக மர வகைகள் மற்றும் துறையால் தயாரிக்கப்படும் உயர்தர நடவுச்செடிகளை காட்சிப்படுத்தும் கூடமாக விளங்குகிறது. தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை நிர்வகிக்கும் விற்பனை நிலையம், மலிவு விலையில் உயிர் உரங்கள், உயிரி கட்டுப்பாட்டு பொருட்கள், மண் கலவைகள், விதைகள் மற்றும் தோட்டக்கலை கருவிகள் போன்ற தோட்டக்கலை சார்ந்த உள்ளீடுகளையும் விற்பனைக்கு வழங்குகிறது.
தோட்டக்கலை அதிகாரிகள் கூறுகையில் இந்த முயற்சி மக்களின் வாழ்க்கையினை பசுமையுடன் செலவிட ஊக்குவிக்கவும், நகர்ப்புறங்களில் தோட்டக்கலையை ஊக்குவிக்கவும் மற்றும் பொதுமக்களுக்கு தரமான நடவுச்செடிகள் வழங்குவதை உறுதி செய்யவதையும் நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. பயிற்சி பெற்ற ஊழியர்களிடமிருந்து தோட்டக்கலை, தாவர பராமரிப்பு மற்றும் வீட்டுத் தோட்டம் குறித்த அடிப்படை வழிகாட்டுதல்களை பார்வையாளர்கள் பெற்று பயன்பெறும் திடலாகவும் இந்த நாற்றங்கால் செயல்படுகிறது என தெரிவித்தனர்.
சுற்றுச்சூழல் பூங்கா அமையவுள்ள இடத்திற்கு அருகில் வருகை தரும் பொதுமக்கள், நாற்றங்கால் பண்ணைக்கு வருகை தந்து, நேர்த்தியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தாவர வகைகள் பார்வையிட்டு பயன்பெற்று வருகின்றனர். பருவகால பூக்கும் தாவரங்கள், மொட்டை மாடித் தோட்டங்களுக்கான மரக்கன்றுகள் மற்றும் அலங்கார செடிகள் மக்களிடையே பிரபலமடைந்து வருவதால், விற்பனை நிலையத்திற்கு வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.பொதுமக்களின் ஈடுபாட்டை மேலும் அதிகரிக்க, நேரடி செயல் விளக்கங்கள் மற்றும் தோட்டக்கலை விழிப்புணர்வு திட்டங்கள் உள்ளிட்ட சிறப்பு விளம்பர நடவடிக்கைகளையும் தொடங்கிட தோட்டக்கலை துறை திட்டமிட்டுள்ளது.
சென்னையில் பசுமைப் பரப்பை அதிகரிப்பது, நகர்ப்புற தோட்டக்கலையை ஊக்குவித்தல் மற்றும் தன்னிறைவான சுற்றுச்சூழல் பொழுதுபோக்கு இடங்களை உருவாக்குதல் ஆகிய அரசாங்கத்தின் உயரிய இயற்க்கை சார்ந்த நோக்கங்களை உறுதி செய்யும் விதமாக இந்த விற்பனை நிலையம் அமைந்துள்ளது என துறை அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.சுற்றுச்சூழல் பூங்கா தோட்டக்கலை நாற்றங்காலை பார்வையிடவும், பல்வேறு தாவர வகைகளை குறைந்த விலையில் பெற்று பயன்பெறவும் தோட்டக்கலைத் துறை பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறது. மேலும் விவரங்களுக்கு +91 98400 72385 மற்றும் +91 99402 45997 ஆகிய எண்களை தொடர்புக்கொள்ளவும்.
மேலும் தோட்டக்கலை நாற்றங்கால், விற்பனை மையம் மற்றும் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகளை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் திரு. பெ. குமரவேல் பாண்டியன் இ.ஆ.ப அவர்கள் 15.11.2025 அன்று ஆய்வு செய்து அவற்றை மேம்படுத்திட உரிய அறிவுரைகள் வழங்கினார். ஆய்வின் போது தோட்டக்கலை துணை இயக்குனர், சென்னை திரு. செ. பாலசுப்பிரமணியம் மற்றும் இதர துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


