Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆன்லைனில் சினிமா டிக்கெட் புக் செய்யும் போது கேளிக்கை கட்டணம் வசூலிக்கலாம்: மும்பை ஐகோர்ட் அனுமதி

மும்பை: ஆன்லைனில் சினிமா டிக்கெட் புக் செய்யும் வாடிக்கையாளர்களிடம் கேளிக்கை கட்டணம் வசூலிக்க கூடாது என்ற உத்தரவை ரத்து செய்து மும்பை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில், திரையரங்குகள் மற்றும் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளங்கள் ஆகியன, ‘ஆன்லைன் மூலம் டிக்கெட் வாங்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து ‘கேளிக்கை கட்டணம்’ (ெபாழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்காக விதிக்கப்படும் வரி) வசூலிக்கக் கூடாது’ என மாநில அரசு இரண்டு உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. மகாராஷ்டிர கேளிக்கை வரிச் சட்டம், 1923-ன் கீழ் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதால், கடந்த பத்து ஆண்டுகளாக அங்கு ஆன்லைன் டிக்கெட்டுகளுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்தது. இந்த உத்தரவு, திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் ‘புக் மை ஷோ’ போன்ற ஆன்லைன் தளங்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில், மாநில அரசின் இந்த உத்தரவுகளை எதிர்த்து பிவிஆர், பிக்கி-மல்டிபிளக்ஸ் சங்கம் மற்றும் புக் மை ஷோ நிறுவனம் ஆகியவை மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.சோனக் மற்றும் ஜிதேந்திர ஜெயின் அடங்கிய அமர்வு, ‘கேளிக்கை கட்டணம் வசூலிக்கத் தடை விதிப்பதற்கு, மாநில அரசின் கேளிக்கை வரிச் சட்டத்தின் கீழ் எந்தவித சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லை; எனவே ஏற்கனவே மாநில அரசு பிறப்பித்த இரண்டு உத்தரவுகளையும் ரத்து செய்கிறோம். மேலும், மாநில அரசு பிறப்பித்த இந்தத் தடை, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் வர்த்தகம் மற்றும் தொழில் செய்யும் உரிமையை மீறுவதாகும். ஆன்லைனில் முன்பதிவு செய்வதா அல்லது திரையரங்கிற்கு நேரடியாகச் சென்று டிக்கெட் வாங்குவதா என்பதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் வாடிக்கையாளர்களுக்கு உள்ளது’ என்று தனது தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால், மகாராஷ்டிராவில் இனிமேல் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவிற்கு கேளிக்கை கட்டணம் வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.