செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம்; தமிழக அரசின் முயற்சிக்கு துணை நிற்போம்: பாஜக செய்தி தொடர்பாளர் அறிக்கை
சென்னை: செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்துக்கு தமிழக அரசின் முயற்சிக்கு துணை நிற்போம் என்று பாஜக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் இன்று வெளியிட்ட அறிக்கை: விவசாயிகளிடம் பெறப்பட்ட நெல்லில், அரிசி அரவையின் போது கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க, மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் தான், நெல் மூட்டைகள் தேங்க காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் இந்த ஆண்டு வரலாற்றில் இல்லாத வகையில் நெல் விளைச்சல் அதிகம். இந்த ஆண்டு சாகுபடி பரப்பு கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக தேவையான அளவு திறப்பதற்கு முயற்சி செய்யாதது ஏன்?. தமிழக மக்கள் உண்மைகளை அறிந்து கொள்ளும் வகையில், விவசாயமும் விவசாயிகளும் காப்பாற்றப்பட, இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழகத்தில் நெல் கொள்முதல் முறையாக நடப்பதற்கும், தமிழக மக்களின் நலம் காக்க, ரத்த சோகை நோய் இல்லாத மாநிலமாக தமிழகம் ஆரோக்கியமாக உருவாகவும், ‘‘செறிவூட்டப்பட்ட அரிசி” வழங்குவதற்கு ஒன்றிய அரசிடமிருந்து பெறுவதற்கான முயற்சிகளை விரைந்து செய்யுங்கள். தமிழக அரசின் முயற்சிகளுக்கு பாஜக துணை நிற்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.