சென்னை: எண்ணூர் பெரியகுப்பம் கடல் பகுதியில் 4 பெண்களின் சடலம் கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த 4 பெண்களும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர்கள். பவானி(19), தேவகி, செல்வம் மற்றும் கல்லூரி மாணவி சாந்தினி. இதில் கல்லூரி மாணவி தவிர மற்ற 3 பேரும் கும்மிடிப்பூண்டி பகுதியில் துணிக்கடையில் வேலை செய்து வந்துள்ளனர். பெரியகுப்பம் கடற்பகுதி ஆழமில்லாத பகுதி ஆகும். இடுப்பு அளவே நின்று குளிக்கும் அளவிற்கு தரைப்பகுதியாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஒரு பெண் கடலில் குளித்து கொண்டிருக்கும் பொழுது மூச்சு திணறி அலையில் சிக்கி உள்ளார். கரையில் இருந்த அடுத்தடுத்த 3 பெண்களும் அந்த பெண்ணை காப்பாற்ற சென்ற போது ஒருவருக்கொருவராக அலையில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அப்பகுதி அருகே உள்ள மீனவர்கள் சடலத்தை பார்த்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எண்ணூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் எப்படி உயிரிழந்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
  
  
  
   
