சென்னை: எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கழிவுகள் கொட்டப்படுவது உடனே நிறுத்தப்பட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தி உள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், எண்ணூர் - கோசஸ்தலையார் ஆற்றில் கட்டிடக் கழிவு மற்றும் திடக்கழிவுகள் கொட்டப்படுவது வேதனை அளிக்கிறது. இந்தச் செயல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களுக்கும் கடலோரக் கட்டுப்பாடு பகுதி (CRZ) விதிகளை நேரடி மீறும் வரம்பு மீறும் நடவடிக்கையாகும்.
எண்ணூர் ஆற்றில் சட்டவிரோதமாகக் கழிவு மற்றும் கட்டிடக் குப்பைகள் கொட்டப்படுவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே தொழிற்துறை மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட பகுதியாக இருக்கும் எண்ணூரில் புதிய கழிவு கொட்டுதல், மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும், உள்ளூர் மக்களின் ஆரோக்கியத்துக்கும் நேரடி அச்சுறுத்தலாக உள்ளது.உள்ளூர் மக்களின் பல முறை புகார்களுக்கும் பிறகும் அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காதது கவலை அளிக்கிறது. அரசு உடனடியாக அனைத்துக் கழிவு கொட்டும் செயல்பாடுகளையும் நிறுத்த வேண்டும்.
மேலும் மாசுபாட்டுக்குக் காரணமான நிறுவனங்களுக்கும் பொறுப்புடைய அதிகாரிகளுக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நிவாரண மற்றும் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எண்ணூர் ஆற்றைப் பாதுகாப்பது சுற்றுச்சூழல் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வும் சார்ந்த பிரச்சினை என்பதை அரசு உணர்ந்து உடனடி, தீவிர பரிகார நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


