பெங்களூரு: தேசிய கீதம் ஆங்கிலேய அதிகாரிகளை வரவேற்க இயற்றப்பட்டதாக பாஜ எம்.பி விஷ்வேஷ்வர் ஹெக்டே காகேரி பேசியிருப்பது பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹொன்னாவரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜ எம்.பி விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரி, வந்தே மாதரம் பாடலுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். வந்தே மாதரம் மற்றும் ஜன கண மன இரண்டுமே சமமானவை. வந்தே மாதரம் பாடலை தேசிய கீதமாக்க வலுவான கோரிக்கைகள் எழுந்தன. பின்னர் நமது முன்னோர்கள் ஆங்கிலேய அதிகாரிகளை வரவேற்க இயற்றப்பட்ட வந்தே மாதரம் மற்றும் ஜன கண மன ஆகிய இரண்டையும் அப்படியே வைத்திருக்க முடிவு செய்தனர். அதைத்தான் நாம் ஏற்றுக்கொண்டு பின்பற்றி வருகிறோம்.
சுதந்திரப் போராட்டத்திற்கு வந்தே மாதரம் பாடல் பெரும் உத்வேகமாக அமைந்தது. வந்தே மாதரம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது வந்தே மாதரம் பாடலை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், இளைஞர்கள் என அனைவருக்கும் வந்தே மாதரத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்று பேசினார். இதுதொடர்பாக அமைச்சர் பிரியாங்க் கார்கே கூறுகையில், ரவீந்திரநாத் தாகூர் 1911ம் ஆண்டு எழுதிய பாடலின் முதல் பத்தியான ஜன கண மன பாடல். 1911ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி கொல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் கூட்டத்தில் தான் முதலில் தேசிய கீதமாக பாடப்பட்டதே தவிர, ஆங்கிலேய அதிகாரிக்கு அரசு பாராட்டுரையாக இயற்றப்பட்டதல்ல’’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.
