ஆங்கில மொழி பேச தெரியாததால் அமெரிக்காவில் 7,200 டிரைவர்கள் வேலையிழப்பு: பஞ்சாப், அரியானா ஓட்டுநர்கள் தவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆங்கில மொழித் தேர்வில் தோல்வியடைந்ததால், இந்தியர்கள் உட்பட ஆயிரக்கணக்கான லாரி ஓட்டுநர்கள் பணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் வர்த்தக ரீதியான லாரி போன்ற கனரக வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்கள், பொதுமக்களுடன் உரையாடவும், சாலை விதிக் குறியீடுகளைப் புரிந்துகொள்ளவும், போக்குவரத்து போலீசிடம் பேசவும், பதிவேடுகளைப் பராமரிக்கவும் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாய விதியாகும்.
இந்திய வம்சாவளி ஓட்டுநர்கள் சம்பந்தப்பட்ட சில கோரமான நெடுஞ்சாலை விபத்துகளுக்குப் பிறகு, மொழிப் பிரச்னை மற்றும் உரிமம் வழங்கும் தரநிலைகள் குறித்த கவலைகள் எழுந்ததால், இந்த விதி தற்போது மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கடுமையான நடவடிக்கையின் விளைவாக, இந்த ஆண்டு மட்டும் சாலையோர ஆங்கில மொழித் தேர்வில் தோல்வியடைந்த 7,200க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் உடனடியாகப் பணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்கப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும், குறிப்பாக பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வட அமெரிக்க பஞ்சாபி டிரக்கர்ஸ் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கப் போக்குவரத்துத் துறைச் செயலாளர் சீன் டஃபி, ‘சாலைப் பாதுகாப்பிற்கு ஆங்கில மொழிப் புலமை அவசியம்’ என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
