மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்டின் 2வது இன்னிங்சில் நமது வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால், 133ஓவர் முடிவில், இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 367 ரன் எடுத்திருந்தது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. கடந்த 23ம் தேதி, மான்செஸ்டரில் துவங்கிய 4வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி, 358 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
பின்னர், முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி, 4ம் நாள் ஆட்டத்தின்போது, 669 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அதனால், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 311 ரன் முன்னிலை பெற்றது. பின்னர், 2வது இன்னிங்சை துவக்கிய இந்தியா, ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. ராகுல் 87 ரன்னுடனும், சுப்மன் கில் 78 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், நேற்று கடைசி நாள் ஆட்டத்தை இந்திய வீரர்கள் தொடர்ந்தனர்.
சிறிது நேரத்தில் ராகுல் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். பின் வந்த வாஷிங்டன் சுந்தருடன் இணை சேர்ந்து ஆடிய சுப்மன் கில், நடப்பு தொடரின் 4வது சதத்தை விளாசினார். அவர், 103 ரன்னில் ஆட்டமிழக்க, ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். இருவரும் பொறுப்பாக ஆடி ரன்களை உயர்த்தினர். 133ஓவர் முடிவில் இந்தியா, 4 விக்கெட் இழப்புக்கு 367 ரன் எடுத்து, 56 ரன் முன்னிலை பெற்றிருந்தது. சுந்தர் 73, ஜடேஜா 81 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இன்னும் 20 ஓவர்கள் மட்டுமே வீசப்பட இருந்ததால், ஆட்டம் டிராவில் முடியும் சூழ்நிலை காணப்பட்டது.