மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியா, 62 ஓவரில், 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன் எடுத்திருந்தது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த 3 டெஸ்ட்களில் இந்தியா ஒன்றிலும், இங்கிலாந்து 2 போட்டிகளிலும் வென்றுள்ளன.
இந்நிலையில், இந்த அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி, மான்செஸ்டரில் நேற்று துவங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு நல்ல துவக்கம் தந்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்னில் இருந்தபோது, டாவ்சன் பந்தில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 46 ரன்னில் இருந்தபோது, வோக்ஸ் பந்தில், கிராவ்லியிடம் கேட்ச் தந்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 94 ரன் எடுத்தனர். பின் வந்த கேப்டன் சுப்மன் கில் 12 ரன்னில், பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் எல்பிடபிள்யு ஆனார். 62 ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழந்து 195 ரன் எடுத்திருந்தது. சாய் சுதர்சன் 43, ரிஷப் பண்ட் 25 ரன்னுடன் ஆடிக் கொண்டிருந்தனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், லியாம் டாவ்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
கே.எல்.ராகுல் 1000 ரன்
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களுக்கு மேல் குவித்த 4வது இந்திய வீரர் என்ற சாதனையை கே.எல்.ராகுல் நேற்று அரங்கேற்றினார். இந்த பட்டியலில் விராட் கோஹ்லியை (976 ரன்) ராகுல் முந்தினார். அவர், சச்சின் டெண்டுல்கர் (1575 ரன்), ராகுல் டிராவிட் (1376 ரன்), சுனில் கவாஸ்கர் (1152 ரன்) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் உள்ளார். மேலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 400 ரன் குவித்த வீரர் என்ற சாதனையையும் நேற்று நிகழ்த்தினார்.