சென்னை: நடப்பு கல்வியாண்டில் பிஇ, பிடெக் மாணவர் சேர்க்கை (அரசு ஒதுக்கீட்டு இடங்கள்) இணையவழி கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடக்கிறது. முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 14 முதல் 16 வரை, 2வது சுற்று ஜூலை 26 முதல் 28 வரைநடந்தது. இதன் மூலம் 91 ஆயிரத்து 365 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
3வது சுற்று கலந்தாய்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. கட் ஆப் மதிப்பெண் 143 முதல் 77.500 வரை பெற்ற மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கின்றனர்.
இவர்கள் 9ம் தேதி மாலை 5 மணிக்குள் பிடித்த கல்லூரிகளை வரிசைப்படி தேர்வுசெய்ய வேண்டும். அவர்களுக்கு 10ம் தேதி காலை 10 மணிக்குள் தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். அதை 11ம் தேதி மாலை 5 மணிக்குள் உறுதிப்படுத்த வேண்டும். 12ம் தேதி காலை 10 மணிக்குள் இறுதி கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். பிறகு கல்வி கட்டணம் செலுத்துவது, அசல் சான்றிதழ் சமர்ப்பிப்பது உள்ளிட்ட சேர்க்கை பணிகளை முடித்துவிட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் 17ம் தேதி மாலை 5 மணிக்குள் சேர வேண்டும்.