சென்னை:அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 417 இன்ஜினியரிங் கல்லூரிகளில் 1.90 லட்சம் இளநிலை இன்ஜினியரிங் படிப்புக்கான இடங்கள் உள்ளன. இதற்கான, 2025-26ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 7ம் தேதி தொடங்கியது. முதல் கட்டமாக, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடந்தது. இந்த கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் தங்களின் விருப்ப கல்லூரிகளை தேர்ந்தெடுக்க கடந்த 7ம் தேதி இரவு 7 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. கல்லூரிகளை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு ஆணை 8ம் தேதி காலை 7 மணிக்கு வழங்கப்பட்டன. இந்நிலையில், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில், சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான இறுதி ஒதுக்கீடு ஆணை 8ம் தேதி இரவு 9 மணிக்கு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 80 மாணவர்களுக்கும், விளையாட்டு வீரர்கள் பிரிவில் 37 மாணவர்களுக்கும், முன்னாள் ராணுவ வீரர்களின் பிரிவில் 8 மாணவர்களுக்குமாக மொத்தம் 125 பேருக்கு இன்ஜினியரிங் படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதை தொடர்ந்து கடந்த 10ம் தேதி பொதுப்பிரிவுகளை சேர்ந்த சிறப்பு பிரிவுக்கான (மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள்) கலந்தாய்வு நடந்தது. இதில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 322 மாணவர்களுக்கும், விளையாட்டு வீரர்களில் பிரிவில் 414 மாணவர்களுக்கும், முன்னாள் ராணுவ வீரர்கள் குழந்தைகள் பிரிவில் 133 மாணவர்களுக்கும் என விருப்ப கல்லூரிகளை தேர்ந்தெடுத்த மொத்தம் 869 மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு ஆணை நேற்று வழங்கப்பட்டது. தொடர்ந்து, இன்று காலை இவர்களுக்கான இறுதி ஒதுக்கீடு ஆணை இன்று காலை வழங்கப்படுகிறது.