சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 417 இன்ஜினியரிங் கல்லூரிகளில், 1.90 லட்சம் இளநிலை இன்ஜினியரிங் படிப்புக்கான இடங்கள் உள்ளன. இதற்கான, 2025-26ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த 7ம் தேதி தொடங்கியது. முதல் கட்டமாக, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் விருப்ப கல்லூரிகளை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு இறுதி ஒதுக்கீடு ஆணை 8ம் தேதி வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 80 மாணவர்களுக்கும், விளையாட்டு வீரர்கள் பிரிவில் 37 மாணவர்களுக்கும், முன்னாள் ராணுவ வீரர்களின் பிரிவில் 8 மாணவர்களுக்கும் என மொத்தம் 125 பேருக்கு இன்ஜினியரிங் படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.இதனைத்தொடர்ந்து கடந்த 10ம் தேதி பொதுப்பிரிவுகளை சேர்ந்த சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் மொத்தம் 869 மாணவர்களுக்கு இறுதி ஒதுக்கீடு ஆணை 12ம் தேதி வழங்கப்பட்டது.
இன்று (ஜூலை 14) பொது கலந்தாய்வு தொடங்கியுள்ளது. பொதுக்கல்வி, தொழில் முறை கல்வி, அரசுப்பள்ளி 7.5 சதவிகித ஒதுக்கீடு ஆகியற்றுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி ஆகஸ்ட் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 21 முதல் 23ம் தேதி வரை துணைக்கலந்தாய்வும், ஆகஸ்ட் 25 முதல் 26ம் தேதிவரை எஸ்சிஏ., எஸ்சி பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளது.