பொறியியல் படிப்புகளில் 5 ஆண்டுகளை விட மாணவர் சேர்க்கை உயர்வு: துணைக் கலந்தாய்வை அடுத்த மாத இறுதியில் கலந்தாய்வு முடியும்
சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வில் மூன்றாம் சுற்று முடிந்துள்ள நிலையில் கடந்த 5 ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகமான மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்ற 421 கல்லூரிகளில் உள்ள 1,90,166 இடங்களுக்கு 2.41 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். கடந்த ஆண்டு விட 40,645 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்து இருந்தனர்.
கடந்த ஜூலை 7ம் தேதி தொடங்கிய பொறியியல் கலந்தாய்வில் 3வது சுற்று நேற்றுடன் முடிவடைந்தது. இந்த மூன்று சுற்று கலந்தாய்வில் மொத்தம் 1,44,481 மாணவர்கள் சேர்க்கை ஆணையம் பெற்று கல்லூரிகளில் சேர்த்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளை விட அதிகம் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை 39 கல்லூரிகளில் அனைத்து இடங்களும், 118 கல்லூரிகளில் 95 சதவீதமும், 205 கல்லூரிகளில் 80 சதவீதம் இடங்களும் நிரம்பி உள்ளனர்.
32 கல்லூரிகளில் 10 சதவீதம் குறைவாகவும், 19 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் கம்ப்யூட்டர் சார்ந்த பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் சற்று குறைந்து ECE, EEE, மெக்கானிக்கல், சிவில் போன்ற படிப்புகளுக்கு மாணவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். கோவை மண்டலத்தில் உள்ள கல்லூரிகளே மாணவர்களின் முதல் விருப்பமாக தேர்வு செய்துள்ளனர்.
அந்த மண்டலத்தில் 53,417 பேரும், சென்னையில் 40,620 பேரும் என இந்த இரண்டு மண்டலத்தில் மட்டும் 71 சதவீதம் மாணவர்கள் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர். அடுத்தபடியாக திருச்சியில் 14,604 மாணவர்களும், மதுரை மண்டலத்தில் 13,067 மாணவர்களும், திருநெல்வேலி மண்டலத்தில் 8,369 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். இன்று தொடங்கும் துணை கலந்தாய்வில் வரும் 25ம் தேதி அருந்ததியினருக்கான சிறப்பு கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த மாதம் இறுதியில் பொறியியல் கலந்தாய்வு முடிவடைகிறது. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவு 80 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் இந்த ஆண்டு நிரம்பும் என கல்வியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.