செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த பெரியநத்தம் காத்தான் தெருவை சேர்ந்தவர் திவாகர் (எ) ஜோஷ்வா (20). இவர் படாளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம், தனது நண்பனின் பைக்கில் கடைக்கு சென்றுவிட்டு அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்புவதற்காக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றார். அவருக்கு முன்னால் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி மீது, பயங்கரமாக பைக் மோதியது. இதில் திவாகர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
அவரை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றிரவு திவாகர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், திவாகரின் கண்கள் அவரது பெற்றோர் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியது.