அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு; நடிகை ரன்யாவின் ரூ.34 கோடி சொத்துகளை முடக்கியதற்கு தடை: கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி
பெங்களூரு: தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை உத்தரவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.
கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம், துபாயில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்த நடிகை ஹர்ஷவர்தினி ரன்யா என்ற ரன்யா ராவை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் ரூ.12.5 கோடி மதிப்பிலான 14.2 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைதொடர்ந்து அவருக்குச் சொந்தமான ரூ.34 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை கடந்த 2025 ஜூலை மாதம் தற்காலிகமாக முடக்கியது. அமலாக்கத்துறையின் இந்த உத்தரவை எதிர்த்து நடிகை ரன்யா ராவ் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சச்சின் சங்கர் மகதும், சொத்துக்கள் முடக்கம் தொடர்பான அமலாக்கத்துறையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். குற்றச்சாட்டுக்கு முன்பு வாங்கப்பட்ட சொத்துக்களை முடக்கியது அதிகார வரம்பற்றது எனக் கூறி, வழக்கின் அடுத்த விசாரணை வரை இந்த இடைக்காலத் தடையை விதித்துள்ளார்.