வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சியில் தமிழகம் தான் முதலிடம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: இந்தியாவிலேயே அதிக வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சர்வதேச தமிழ் பொறியாளர்கள் மன்றத்தின் மாநாடு மற்றும் கண்காட்சி சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்து வருகிறது. தொடர்ந்து 2வது நாளாக நேற்று நடந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, மன்றத்தின் மேம்பாட்டு திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், பயிற்சி பெற்ற 3 ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: இந்த மாநாட்டில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் புதிதாக கையெழுத்தியாகியுள்ளன. இதன்மூலம் 6000 பேருக்கு வேலைவாய்ப்புகள் அமையும். உலகம் முழுவதும் தமிழ் பொறியாளர்களின் பங்களிப்பு இருந்து வருகிறது. இந்தியாவிலேயே அதிக வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் காரணமாக தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் தொடர்ந்து கூடுதலாக கிடைக்கும்.
தற்போது உலகளவில் லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் இருக்கின்றனர். அதற்கான விதையை முதலில் போட்டது கலைஞர் தான். இதுதவிர பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ததுடன், முதல் தலைமுறை பட்டதாரிகளின் கல்விச் செலவையும் அரசே ஏற்க வழிசெய்தார். அதேபோல், முதல்வர் ஸ்டாலினும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். தற்போது தமிழகத்தில் இருந்து பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு மாணவர்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு அந்த நாடுகளில் உள்ள தமிழ் பொறியாளர்கள் இருப்பார்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
* புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னை வர்த்தக மையத்தில் நடந்த சர்வதேச தமிழ் பொறியாளர்கள் மன்றத்தின் மாநாடு மற்றும் கண்காட்சியில் பஹ்ரைன் நாட்டின் அஹ்லியா பல்கலைக்கழகத்துடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பரிமாற்றம், கூட்டு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள், புதுமை மற்றும் துவக்க நிறுவனம் தொடர்பான செயல்பாடுகள், சர்வதேச இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் ஆகியவற்றை முன்னெடுத்து, தமிழ்நாட்டு இளைஞர்களை உலகளாவிய தொழில் வாய்ப்புகளுக்குத் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நான் முதல்வன் ஸ்கவுட் (Scholarships for Outstanding Undergraduate Talent in Tamil Nadu) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் 100 மாணவர்கள் பல்வேறு நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சர்வதேச இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளைப் பெறுவார்கள். குறிப்பாக, தமிழ்நாட்டின் அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் முக்கிய பயனாளர்களாக இருப்பார்கள்.
ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மாணவர்களின் பயணச் செலவுகளை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் ஏற்றுக்கொள்ளும். அதேசமயம், அஹ்லியா பல்கலைக்கழகம் வளாகத்திலேயே பயிற்சி, தங்குமிடம் மற்றும் தொடர்புடைய வசதிகளை வழங்கும். இதன் மூலம், பங்கேற்கும் மாணவர்கள் விரிவான சர்வதேச அனுபவத்துடன் திறன் பயிற்சி பெறுவார்கள்.