சென்னை: அமெரிக்க வர்த்தகப் போரால் தொழில் வீழ்ச்சி, வேலைவாய்ப்பு இழப்பை தடுக்க ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: அமெரிக்கா தொடுத்துள்ள வர்த்தகப் போரின் காரணமாக தமிழ்நாடு மிகக் கடுமையாக பாதிக்கப்படும். அமெரிக்க வர்த்தகப் போர் காரணமாக நேரடியாக ஏற்படும் பாதிப்புகளை விட இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பாதிப்புகள் மிகவும் மோசமானதாக இருக்கும்.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, இந்த பாதிப்புகளின் தாக்கத்தை முழுமையாக தடுக்க முடியாது என்றாலும் கூட, இந்திய தொழில்துறையினரும், தொழிலாளர்களும் பாதிக்கப்படாத வகையில் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2008ம் ஆண்டு பொருளாதார மந்தநிலையின் போதும், கொரோனா காலத்தின் போதும் தொழில்துறையினருக்கு வழங்கப்பட்டதைப் போல ஊக்குவிப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.
வங்கிகளுக்கு தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தவணைகள் நிலைமை சீரடையும் வரை நிறுத்தி வைப்பது, அவற்றுக்கான வட்டியை தள்ளுபடி செய்வது, நிலைமை சமாளிக்க அவசர கால கடன் வழங்குவது, வட்டி மானியத்தை அதிகரிப்பது, வரிச் சலுகைகளை உயர்த்துவது உள்ளிட்ட சலுகைகளை ஒன்றிய அரசு வழங்க வேண்டும். அதேபோல், தமிழ்நாட்டில் வேலை இழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு மாதம் குறைந்தது ரூ.5000 உதவி வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.