Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரூ.3,250 கோடி முதலீட்டில் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் போர்டு கார் ஆலையில் இன்ஜின் உற்பத்தி: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் போர்டு கார் இன்ஜின் உற்பத்தி செய்யும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3,250 கோடி முதலீட்டில் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் 17 நாள் சுற்றுப்பயணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது, உலகப் புகழ்பெற்ற 500 நிறுவனங்கள் இடம்பெற்ற பார்ச்சூன் பட்டியலில் உள்ள 18 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. சென்னையில் இயங்கி வந்த உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த கார் கம்பெனியான போர்டு நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்தது.

சென்னையை தொடர்ந்து குஜராத்தில் சனாண்ட் என்ற இடத்தில் தொடங்கிய தொழிற்சாலையையும் டாட்டா நிறுவனத்துக்கு விற்றுவிட்டது. இதேபோல், சென்னை தொழிற்சாலையையும் விற்க முயற்சிகள் நடந்தன. இந்த நிலையில்தான், சென்னையில் போர்டு நிறுவனம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சி மேற்கொண்டார். அந்த வகையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டபோது முதல்வர், போர்டு நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து, தமிழ்நாட்டில் மீண்டும் கார் தயாரிக்கும் பணிகளை தொடங்க வேண்டும், அதற்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதி அளித்திருந்தார். சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, அமெரிக்காவில் இருந்து விமானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்ட நேரத்தில், போர்டு நிறுவனத்திடம் இருந்து ஒரு நல்ல செய்தி கிடைத்தது. முதல்வரின் வேண்டுகோளை ஏற்று சென்னையில் போர்டு நிறுவனம் மீண்டும் உற்பத்தியை தொடங்க முடிவு செய்துவிட்டது என்ற நல்ல செய்திதான் அது.

உலகில் முன்னணி கார் நிறுவனமான போர்டு, அமெரிக்காவில் உள்ள மிச்சிகனை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்த நிறுவனம் 1995ம் ஆண்டு ரூ.1,700 கோடி முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் 350 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலையை அமைத்தது. இந்த நிறுவனம் 1996ல் தனது முதல் காரை வெளியிட்டது. முதலில் மகிந்திரா நிறுவனத்தோடு இணைந்து செயல்பட்ட இந்த நிறுவனம், 1998ல் தனியாக செயல்பட தொடங்கியது. அப்போது மேற்கொள்ளப்பட்ட தொழிற்சாலை விரிவாக்கத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் தொடங்கிவைத்தார். அவர் அளித்த பல சலுகைகளால் இந்த தொழிற்சாலையில் 3 ஷிப்டுகளில் வேலை நடந்து, பலவித பெயர்களிலான கார்கள், கார் என்ஜின்கள் தயாரிக்கப்பட்டு உலகில் உள்ள 37 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

மீண்டும் 2009ல் ரூ.1,500 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டு, அதையும் கலைஞர் தொடங்கி வைத்தார். இதன்மூலம் ஒரு லட்சமாக இருந்த கார்களின் உற்பத்தி 2 லட்சமாக உயர்ந்தது. இதுதவிர, ஆண்டுக்கு 2½ லட்சம் கார் என்ஜின்களையும் தயாரிக்க தொடங்கியது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்த நிறுவனம் 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொழிற்சாலையை மூடுவதாக அறிவித்தது. இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தனர். மேலும், இந்தியாவில் அதிக வரி விதிக்கப்பட்டதும் இந்த ஆலை மூடுவதற்கு ஒரு காரணமாக கூறப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் 3 ஆண்டுகளுக்கு பிறகு, மூடப்பட்ட இந்த தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தி தொடங்குவதற்கான பணிகள் தொடங்கின.

இதைதொடர்ந்து போர்டு நிறுவனம், ரூ.3,250 கோடி முதலீட்டில் 600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில், அடுத்த தலைமுறை வாகன என்ஜின் உற்பத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்றைய தினம், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் அருண் ராய், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது, போர்டு நிறுனத்தின் உலகளாவிய இயக்குநர் மார்ட்டின் எவரிட், துணைத் தலைவர் மாத்யூ கோடிலூஸ்கி, தாய்லாந்து திட்டத்தின் மேலாண்மை இயக்குநர் சைமோநேட்டா வெர்டி, இயக்குநர் (உற்பத்தி) தீரஜ் தீக்சித், இயக்குநர் பாத் பட் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதன்மூலம் மோட்டார் வாகன உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு மேலும் உத்வேகத்துடன் செயல்படும். போர்டு மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருவதன் மூலம் ஆசியாவின் டெட்ராயிட் என்ற பெயரை மீண்டும் தமிழ்நாடு நிரூபித்துள்ளது.

* போர்டு நிறுவனத்தின் மீள்வரவு நல்வரவாகட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி

போர்டு நிறுவனத்தால் ரூ.3,250 கோடி முதலீட்டில் 600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மறைமலை நகரில், அடுத்த தலைமுறை வாகன இன்ஜின் உற்பத்தி செய்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவு: முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது போர்டு நிறுவனம். போர்டு நிறுவனம் 3,250 கோடி ரூபாய் முதலீட்டில் அடுத்த தலைமுறை வாகன இன்ஜின் உற்பத்தி அலகை தனது மறைமலை நகர் தொழிற்சாலையில் அமைக்க உள்ளது. மிக நீண்ட, நம்பிக்கை கொண்ட உறவினை புதுப்பிக்கும் வகையில் இந்த ஆற்றல்மிகு மீள்வருகை அமைந்துள்ளது. இந்த முக்கிய முதலீட்டினால் 600 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் உதிரி பாகச் சூழலும் வலுவடையும். அடுத்த தலைமுறை இன்ஜின்களை உற்பத்தி செய்ய இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரத்தை தேர்வு செய்துள்ள போர்டின் முடிவானது, தமிழ்நாட்டின் தொழில்துறை வலிமைக்கும் உலக உற்பத்தி சங்கிலியில் நமது தவிர்க்க முடியாத இடத்துக்கும் மற்றுமொரு சான்றாக உள்ளது. தங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.