Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

6,250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்; ரூ.3,201 கோடிக்கு முதலீடு ஈர்ப்பு: ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்த்திடும் வகையில் ஜெர்மனி நாட்டின் மூன்று நிறுவனங்களுடன் ரூ.3,201 கோடி முதலீட்டில் சுமார் 6250 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பிஎம்டபிள்யு குழும நிறுவன உயர் அலுவலர்களுடன் தமிழ்நாட்டில் அந்நிறுவனத்தின் விரிவாக்க பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டை 2030ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை அடைந்திடவும், அதிக முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்திட அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 30ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார். ஜெர்மனியின் டசெல்டோர்ப் சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த முதல்வரை வட ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணத்தின் முதலமைச்சர் ஹென்ட்ரிக் வூஸ்ட் சார்பாக, அவருடைய அரசின் தூதரக விவகாரங்கள் மற்றும் அரசுமுறை வரவேற்பு பிரிவின் அன்யா டி வூஸ்ட், இந்திய தூதரகத்தின் பொறுப்பாளர் அபிஷேக் துபே உள்ளிட்ட அலுவலர்கள் வரவேற்றனர். மேலும், ஜெர்மனி வாழ் தமிழர்களும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதை தொடர்ந்து நேற்று முன்தினம் (31ம் தேதி) ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் நடந்த மாபெரும் தமிழ் கனவு - ஜெர்மனி வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதன் தொடர்ச்சியாக, நேற்று (1ம் தேதி) டசெல்டோர்ப் நகரில் நார் பிரெம்ஸ், நோர்டெக்ஸ் குழுமம், ஈபிஎம்-பாப்ஸ்ட் ஆகிய நிறுவனங்களுடன் ரூ.3,201 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 6250 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின், பிஎம்டபிள்யு குழும நிறுவன உயர் அலுவலர்களுடன் தமிழ்நாட்டில் அந்நிறுவனத்தின் விரிவாக்க பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

நார் பிரெம்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்:

ஜெர்மனி நாட்டின், முனிச் நகரை தலைமையகமாக கொண்ட நார் -பிரெம்ஸ் நிறுவனம், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் ரூ.2,000 கோடி முதலீட்டில் சுமார் 3500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில், ரயில்வே கதவுகள் மற்றும் பிரேக்கிங் அமைப்புகளுக்கான அதிநவீன வசதியை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இத்திட்டம் தமிழ்நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் ரயில்வே கூறுகள் மற்றும் மேம்பட்ட பொறியியல் சுற்றுச்சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்தும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நார் பிரெம்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மார்க் லிஸ்டோசெலா, துணைத் தலைவர் ஓலிவர் கிளக் ஆகியோர் கையெழுதிட்டனர்.

நோர்டெக்ஸ் குழும நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்:

ஜெர்மனி நாட்டின் ஹேம்பர்க் நகரை தலைமையகமாக கொண்ட நோர்டெக்ஸ் குழும நிறுவனம், உலகின் மிகப்பெரிய காற்றாலை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதன் தற்போதைய ஆலையை விரிவுபடுத்தும் வகையில் ரூ.1,000 கோடி முதலீட்டில் சுமார் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த விரிவாக்கம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் பசுமை தொழில்மயமாக்கலில் தமிழ்நாட்டின் தலைமையை வலுப்படுத்துகிறது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், நோர்டெக்ஸ் குழுமத்தின் முதன்மை செயல்பாட்டு அலுவலர் லூயிஸ் ஆல்பர்டோ பெர்ணான்டஸ் ரோமேரோ, இந்திய தலைவர் சரவணன் மாணிக்கம் ஆகியோர் கையெழுதிட்டனர். இந்த விரிவாக்கம் காற்றாலை உற்பத்தியின் உள்நாட்டு மற்றும் சர்வதேச தேவைகளை பூர்த்தி செய்யும்.

பிஎம்-பாப்ஸ்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: ஜெர்மனி நாட்டின் மல்பிங்கன் நகரை தலைமையகமாக கொண்டுள்ள பிஎம்-பாப்ஸ்ட் நிறுவனம், மின்சார மோட்டார்கள் மற்றும் மின்விசிறிகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகும். இது அதன் புதுமையான மற்றும் ஆற்றல் திறன் கொண்ட காற்று இயக்க தீர்வுகளுக்கு உலகளவில் பெயர் பெற்றது. இந்த நிறுவனம் மின்னணு ரீதியாக மாற்றப்பட்ட மோட்டார் தொழில்நுட்பத்தை முன்னோடியாக கொண்டு எச்விஏசி, ஆட்டோமோட்டிவ், குளிர்பதனம் மற்றும் தொழில்துறை பொறியியல் போன்ற தொழில்களுக்கு சேவை ஆற்றுகிறது.

இந்நிறுவனம் சென்னையில் அதன் உலகளாவிய திறன் மையத்தை விரிவுபடுத்தவும், தமிழ்நாட்டில் அதன் உற்பத்தியை அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.201 கோடி முதலீட்டில் விரிவுபடுத்தவும், சுமார் 250 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பிஎம்-பாப்ஸ்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அதுல் திரிபாதி கையெழுதிட்டார்.

பிஎம்டபிள்யு குழும நிறுவன உயர் அலுவலர்களுடன் சந்திப்பு: ஜெர்மனி நாட்டின், முனிச் நகரை தலைமையகமாக கொண்டுள்ள பிஎம்டபிள்யு குழும நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டத்தில் வாகனங்களுக்கான ஆட்டோமொடிவ் அசல் உபகரணங்கள் உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது. தமிழ்நாட்டில் ஆட்டோமொடிவ் துறையில், குறிப்பாக மின்சார வாகன பிரிவில் அந்நிறுவனத்தின் எதிர்கால விரிவாக்கத்திற்கான வாய்ப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், பிஎம்டபிள்யு குழும நிறுவனத்தின் அரசு விவகாரங்களுக்கான உலகளாவிய தலைமை அலுவலர் தாமஸ் பெக்கர், பிஎம்டபிள்யு இந்திய நிறுவனத்திற்கான அரசு மற்றும் வெளியுறவு இயக்குநர் வினோத் பாண்டே ஆகியோரை சந்தித்து பேசினார்.

இந்த நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தாரேஸ் அகமது ஆகியோர் உடனிருந்தனர்.

  • காஞ்சிபுரம், சென்னையில் நார் -பிரெம்ஸ் நிறுவனம் ரூ.2,000 கோடி முதலீட்டில் சுமார் 3500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், ரயில்வே கதவுகள் மற்றும் பிரேக்கிங் அமைப்புகளுக்கான அதிநவீன வசதியை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
  •  நோர்டெக்ஸ் குழும நிறுவனம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தற்போதைய ஆலையை விரிவுபடுத்தும் வகையில் ரூ.1,000 கோடி முதலீட்டில் சுமார் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
  •  பிஎம்-பாப்ஸ்ட் நிறுவனம், சென்னையில் அதன் உலகளாவிய திறன் மையத்தை விரிவுபடுத்தவும், தமிழ்நாட்டில் அதன் உற்பத்தியை அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.201 கோடி முதலீட்டில் விரிவுபடுத்தவும் சுமார் 250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.