Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

5 மற்றும் 6வது மண்டலங்களில் தற்காலிக பணியாளர்கள் மூலம் முழுவீச்சில் தூய்மைப்பணிகள்: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: மண்டலம் 5 மற்றும் 6ல் தற்காலிக தூய்மைப்பணியாளர்கள் தனியார் நிறுவனத்தில் விருப்ப கடிதத்தை கொடுத்து பணியில் சேர்ந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் மூலம் தூய்மைப்பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி, திடக்கழிவு மேலாண்மை பணிகளில் தனியார்மயமாக்கல் முறையை பின்பற்றி, சேவையின் தரத்தை உயர்த்துவதுடன், பணியாளர்களின் நலனையும் உறுதி செய்யும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.

2020ம் ஆண்டு முதல், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில், 10 மண்டலங்கள் மற்றும் மண்டலம் 7ல் உள்ள 3 வார்டுகளும் தனியார் நிறுவனங்களின் வழியே செயல்பட தொடங்கின. இதனுடன் சேர்த்து, தற்போது மண்டலம் 5 மற்றும் 6ல் மேற்கொள்ளப்பட்டு வந்த தூய்மைப் பணிகள் ராம்கி நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டு 21.7.2025 முதல் அந்நிறுவனம் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 1.8.2025 முதல் மண்டலம் 5 மற்றும் 6ல் சுய உதவிக் குழுக்கள் மூலம் பணிபுரிந்து வந்த தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் ராம்கி நிறுவனத்தில் பணியில் சேராமல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ராம்கி நிறுவனம் ஒப்பந்தப்படி, மொத்தம் 3809 தூய்மைப் பணியாளர்களை பணியில் நியமிக்க வேண்டும். தற்போது வரை 1770 பணியாளர்களை ராம்கி நிறுவனம் பணி அமர்த்தியுள்ளது.

இது நாள் வரை பணிபுரிந்து வந்த மண்டலம் 5 மற்றும் 6ஐ சார்ந்த சுய உதவிக் குழுக்களின் தற்காலிக தூய்மைப்பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க சென்னை மாநகராட்சியால் போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், ராம்கி நிறுவனத்தில் மீதமுள்ள 2039 பணியாளர் இடங்கள் மண்டலம் 5ல் (975 பேர்) மற்றும் மண்டலம் 6ல் (1059 பேர்) பணிபுரிந்த சுய உதவி குழுக்களின் தற்காலிக தூய்மைப்பணியாளர்களுக்காக பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தலின்படி அந்நிறுவனத்தாரால் ஒதுக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல், மண்டலம் 5 மற்றும் 6ல் பணிபுரிந்த சுய உதவிக்குழுக்களின் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் ராம்கி நிறுவனத்தில் தங்களுடைய விருப்ப கடிதத்தை கொடுத்து பணியில் சேர்ந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் 21ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை மண்டலங்கள் 5 மற்றும் 6ல் முறையே 9696 மெட்ரிக் டன் மற்றும் 7451 மெட்ரிக் டன் குப்பையை அகற்றியுள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.