இமானுவேல் சேகரன் நினைவு தினம் பரமக்குடியில் நாளை அனுசரிப்பு; துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்: 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
ராமநாதபுரம்: பரமக்குடியில் நாளை இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று மரியாதை செலுத்துகின்றனர். இதையொட்டி 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை (11ம் தேதி) தியாகி இமானுவேல் சேகரன் 68ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனால், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் நாளை காலை 8 மணிக்கு இமானுவேல் சேகரன் குடும்ப உறுப்பினர் பிரபாராணி அஞ்சலி செலுத்துகிறார். தொடர்ந்து 9 மணிக்கு திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, முருகேசன் எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்துகின்றனர்.
தொடர்ந்து ஓபிஎஸ் அணியின் சார்பில் எம்பி தர்மர், அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் முருகன், காங்கிரஸ், பாஜ, விடுதலைச்சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள், அமைப்பினர் என 30க்கும் மேற்பட்டோருக்கு அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே பல்வேறு கிராம மக்களும் வந்து அஞ்சலி செலுத்த உள்ளனர். மாவட்டம் முழுவதும் கட்டுப்பாடுகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. நினைவிட பகுதியில் பரமக்குடி ஆர்டிஓ சரவணப்பெருமாள் தலைமையில் 6 ஆர்டிஓ தகுதியில் நிர்வாகத் துறை நடுவர்களாகவும், தாசில்தார், துணை தாசில்தார் நிலையில் 56 நிர்வாகத்துறை நடுவர்களும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பரமக்குடியில் 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள், 7 டிரோன் கேமராக்கள், நடமாடும் கேமராக்கள் என மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.