எமிஸ் தளத்தில் அக். 20ம் தேதிக்குள் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
சென்னை: வருகிற அக்டோபர் 20ம் தேதிக்குள் மாணவர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் 2025-26ம் கல்வியாண்டில் அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பாக பல்வேறு முன்னெடுப்புகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்து வழிகாட்டுதல்கள் வழங்குவதற்கும், உயர்கல்வி சேர்க்கையை உறுதி செய்யும் வகையிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்கள் சார்ந்த விவரங்களை பள்ளிக்கல்வித் துறையின் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மாவட்டங்களில் ஆசிரியர்கள் பதிவிடக்கூடிய தகவல்களின் அடிப்படையில் மட்டுமே இனிவரும் நாட்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் உயர்கல்வி சார்ந்து வழிகாட்டுதல்கள் மற்றும் உயர்கல்வி சேர்க்கையை உறுதிசெய்ய வழிவகுக்கும். ஆகவே வகுப்பு ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களின் விவரங்களை முழுமையாக பதிவு செய்வதை தலைமை ஆசிரியர்கள் உறுதிசெய்யவேண்டும்.
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் மாணவர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 20ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யப்படுவதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.