சுதந்திரப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனாரின் 68வது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை..!!
சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனாரின் 68வது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பத்திரிக்கை நண்பர்களுக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். நம்முடைய சுதந்திர போராட்ட தியாகி, இந்தியாவிற்காக இராணுவத்தில் பாடுபட்டவர். சமூக நீதி போராளி. மறைந்த ஐயா இமானுவேல் சேகரனார் அவர்களுடைய 68 வது நினைவு நாளையொட்டி முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசின் சார்பாக நானும், கழகத்தினுடைய மூத்த அமைச்சர்களும். சட்டமன்ற உறுப்பினர்களும். கழக நிர்வாகிகளும் வந்து இங்கே எங்களுடைய மரியாதையை நாங்கள் செலுத்தியுள்ளோம்.
அவருடைய புகழ் என்றென்னும் ஓங்கி நிற்கட்டும். சமூக நீதிக்காக அரும்பாடு பட்டவர். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர் இமானுவேல் சேகரனார் . அவருடைய குடும்பத்தினர் அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும். சிலை வைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தார்கள்.சென்ற வருடமே நம்முடைய முதலமைச்சர் அதற்கான உத்தரவையிட்டார்கள். உடனடியாக 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார்கள். பரமக்குடி நகராட்சி பகுதியில் அவருக்கு நினைவு மண்டபம் கட்டும் பணி கிட்டத்தட்ட 95 சதவீதம் நிறைவு பெற்ற நிலையில் நடைபெற்று வருகின்றது. மணிமண்டபம் உள்ளே அவருடைய திருவுருவச் சிலை வைக்கின்ற இறுதிகட்டப் பணி நடைபெற்று வருகின்றது. இன்னும் 2 மாதங்களில் மணிமண்டபமும், சிலையும் திறக்கப்படும் என்ற செய்தியை நான் இங்கே கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
சுதந்திர பேராட்ட தியாகி இமானுவேல் சேகரனார் புகழ் ஓங்கட்டும். அடுத்து வருகின்ற தலைமுறையினருக்கும் அவருடைய சமூக நீதி பணி, அவருடைய பெருமைகள் கொண்டு சேர்க்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று துணை முதலமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்வில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், செ.முருகேசன், தமிழரசி ரவிக்குமார், செ. சண்முகையா, மாவட்ட ஆட்சி தலைவர் சிம்ரன்ஜித் சிங் காலோன் ஆகியோர் கலந்து கொண்டனர்.