பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் ஆழியார் அருகே வால்பாறை மலைச் சாலையில் யானை ஒன்று ஒய்யாரமாக நடந்து சென்று கொண்டிருந்தது. செல்லும் வழியில் ஆங்காங்கே யானை மேய்ச்சலில் ஈடுபட்டது. இதனால் வால்பாறை மலைச்சாலையில் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே நின்று கொண்டனர். நீண்ட நேர காத்திருப்புக்குப் பின் வனத்திற்குள் யானை சென்றதால் வாகன ஓட்டிகள் அங்கிருந்து கிளம்பினர்.
வால்பாறை ரோட்டில் யானை உணவு தேடி அடிக்கடி உலா வருவதால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் யானையை தொந்தரவு செய்யக்கூடாது எனவும், வாகன ஓட்டிகள் கவனமாக செல்வதுடன் வால்பாறை மலைப்பாதையில் இரவு நேர வாகன இயக்கத்தை தவிர்ப்பது நல்லது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
