வால்பாறை: வால்பாறையில் இன்று அதிகாலை 2 இடங்களில் வீடு, கடைகளை காட்டு யானைகள் உடை சேதப்படுத்தின. சோவை மாவட்டம் வால்பாறை அடுத்து ஆனைமுடி எஸ்டேட், வெள்ளமலை மட்டம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதி வனத்தை ஒட்டியுள்ளது. இதனால், அப்பகுதியில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில், இன்று அதிகாலை வால்பாறை அடுத்த கூழாங்கல் ஆற்று பகுதிக்கு வனப்பகுதியில் இருந்து யானை ஒன்று வெளியே வந்தது. சாலையோரத்தில் இருந்த கடைகளில் உணவு தேடிய அந்த யானை 3 கடைகளை உடைத்து சேதப்படுத்தியது.
இதேபோல், இன்று காலை வனத்தில் இருந்து வெளியே வந்த 5 யானைகள் கூட்டமாக சோலையார் அணை அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மணி என்பவர் வீட்டை உடைத்து சேதப்படுத்தின. அப்போது வீட்டில் இருந்தவர்கள் வீட்டைவிட்டு வெளியேறி தப்பி ஓடி உயிர் பிழைத்தனர். வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலும் சேதம் அடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். ஒரே நாளில் 2 இடங்களில் யானைகள் கடை மற்றும் வீட்டை சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.