*மக்கள் அச்சம்
வால்பாறை : கோவை மாவட்டம் வால்பாறை மலை தொடர் வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தை, புலி,காட்டுமாடு, செந்நாய், கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இதில், சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வளர்ப்பு கால்நடைகளை வேட்டையாடி வருவது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை வால்பாறை அடுத்துள்ள அக்காமலை எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் உணவு தேடி 2 காட்டு யானைகள் நுழைந்தன. அவை இரண்டு வீடுகளின் கதவுகள், ஜன்னல் மற்றும் பொருட்களை உடைத்து சூறையாடியது. சுதாரித்து கொண்ட பெண்கள், குழந்தைகள் அனைவரும் பாதுகாப்புக்காக வீடுகளிலிருந்து வெளியேறி பாதுகாப்பாக அருகில் வசிப்பவர்களின் வீடுகளில் தஞ்சமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், ஆங்காங்கே தீயிட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். ஆனால் யானைகள் சற்று நேரம் அங்கும் இங்குமாக உலா வந்து பின்னர் மெதுவாக வனப்பகுதி நோக்கி சென்றன. காட்டு யானை அட்டகாசத்தால் வீடுகளில் ஏற்பட்ட சேதங்களை வனத்துறை கணக்கெடுத்து சென்றனர்.மேலும் அப்பகுதியில் மக்கள் பாதுகாப்புக்காக இரவு ரோந்து அதிகரிக்கப்படும் என வனத்துறை தெரிவித்தனர்.


