மதுரை: மதுரை மாவட்ட வனவிலங்கு வனச்சரகர் வெனிஸ் தலைமையிலான அதிகாரிகள், மதுரை வளர் நகர் அருகே ராம் நகரில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக ஆய்வு செய்தனர். அப்போது, யானை தந்தத்துடன் 5 பேர் பதுங்கியிருந்தது தெரியவந்தது. 5 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், மதுரையைச் சேர்ந்த ரமேஷ்(43), சுதாகர்(52), ரகுநாத்(51), சுப்ரமணி(52), திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணிக்கராயர் (39) என, தெரியவந்தது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தேனி மாவட்டம், போடியை சேர்ந்த ஜமீன் குடும்ப வாரிசான வடமலை ராஜபாண்டியன் (எ) ரமேஷ் பாண்டியன் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு டயாலிசிஸ் சிகிச்சைக்காக சென்றபோது, மருத்துவமனையில் உள்ள கோயில் அர்ச்சகர் சுதாகர், கேண்டீனில் பணிபுரியும் ரகுநாத் ஆகிய இருவர் அறிமுகமாகி உள்ளனர்.
அப்போது அவர்களிடம், தன்னிடம் 1.6 மீட்டர் நீளமுள்ள 26 கிலோ எடையிலான யானை தந்தம் இருப்பதாகவும் அதனை விற்றுத் தருமாறும் ராஜபாண்டியன் கூறியுள்ளார். இதையடுத்து, ராஜபாண்டியனின் நேர்முக உதவியாளர் ரமேஷ் என்பவர் நேற்று முன்தினம் தந்தத்துடன் மதுரை வந்து அவர்களிடம் கொடுத்து சென்றுள்ளார். இந்த தகவல் கிடைத்ததைதொடர்ந்து ரமேஷை கைது செய்தோம்.
பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தத்தின் சந்தை மதிப்பு ரூ.6 கோடி இருக்கும். பறிமுதல் செய்த யானை தந்தமானது, தலைமறைவாகி உள்ள ஜமீன் ரமேஷ் பாண்டியனின் பரம்பரை சொத்து எனவும் கூறப்படுகிறது. ஆனால், வனச்சட்டப்படி யானை தந்தம், புலி நகங்கள் போன்றவற்றை வைத்திருப்பது குற்றம் என்பதால், அவரை பிடித்து தேடும் பணிகளை முடுக்கி விட்டுள்ளோம். இவ்வாறு கூறினர்.