Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வரும் தலைமுறையினருக்காக யானைகள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் திகழச் செய்ய உறுதியேற்போம் :முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : வரும் தலைமுறையினருக்காக யானைகளை பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வைத்திருப்பதற்கு உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலக யானைகள் நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்," உலக யானைகள் நாளில், தமிழ்நாட்டின் இயற்கை மரபையும் வரலாற்றையும் செழுமைப்படுத்துவதில் யானைகளின் அளப்பரிய பங்கினைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.

கோவையில், ஒன்றிய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் யானைகள் நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு, மதுக்கரையில் நாம் அமைத்துள்ள செயற்கை நுண்ணறிவு எச்சரிக்கை அமைப்பைப் பார்வையிட உள்ளார். இந்த அமைப்பின் மூலம் 2,800 முறை யானைகள் ரயில் தண்டவாளத்தைப் பாதுகாப்பாகக் கடந்து சென்றுள்ளன. இதனால் 2024-ம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து ஒரு யானை கூட ரயில் மோதி உயிரிழக்காமல் காப்பாற்றியுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில், தெப்பக்காட்டில் யானைப் பாகர்களுக்கான கிராமத்தையும் நமது திராவிட மாடல் அரசின் சார்பில் தொடங்கி வைத்தேன். நமது யானைகளை அக்கறையோடு பராமரிக்கும் பாகர்களுக்கான சுற்றுச்சூழலோடு இயைந்த வீடுகளை அது கொண்டுள்ளது. யானைகளைப் பாதுகாப்பதோடு யானைப் பாகர்களின் நலனையும் இது மேம்படுத்துகிறது. இனி வரும் காலங்களிலும் யானைகள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் திகழச் செய்ய இந்நாளில் உறுதியேற்போம்."இவ்வாறு கூறியுள்ளார்.