சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே பண்ணாரி வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையோரம் நடமாடிக் கொண்டிருந்த காட்டு யானைக்கு அவ்வழியே காரில் சென்ற பயணி ஒருவர் கீழே இறங்கி சென்று வாழைப்பழம் கொடுத்துள்ளார். அப்போது யானை அந்த நபரை துரத்தியதில் நூலிழையில் உயிர் தப்பினார். இதுதொடர்பான வீடியோ கடந்த 3 நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில் சத்தியமங்கலம் வனத்துறையினர் யானைக்கு வாழைப்பழம் கொடுத்த நபர் பற்றி விசாரணை மேற்கொண்டதில், அவர் கோவை மாவட்டம் அன்னூர் அருகே மாதே கவுண்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (58) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வனத்துறையினர் வனக்குற்ற வழக்குப்பதிந்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.